பதிவு செய்த நாள்
11
மார்
2025
11:03
பாகூர்: சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன், செல்வ விநாயகர் உள்ளிட்ட 9 கோவில்களின், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
பாகூர் அடுத்த சேலியமேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் மாரியம்மன், செல்வ விநாயகர், திருமுறைநாயகி உடனுறை ஜோதி லிங்கேஸ்வரர்,சிவகாம சுந்திரி உடனுறை ஆனந்த நடராஜர், பக்த ஆஞ்சநேயர், குடிதாங்கி அம்மன், பரந்துகட்டி ஐய்யனார், அய்யப்பன், கோகுல கண்ணன் கோவில்கள் உள்ளது. இக்கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 6ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. 7ம் தேதி லட்சுமி ேஹாமம், தனபூஜை, புதிய விக்ரகங்கள் கரிக்கோலம், முதல் கால பூஜை நடந்தது. 9ம் தேதி காலை இரண்டாம் கால பூஜை, சிறப்பு சோம கும்ப பூஜையும், மாலை மூன்றாம் கால பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வான கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. காலை நான்காம் கால யாக பூஜை, கோ பூஜை, ரக்ஷா பந்தனம் நடந்தது. தொடர்ந்து, காலை 6.15 மணிக்கு, பரந்துகட்டி ஐயனார், 6.45 மணிக்கு குடிதாங்கி அம்மன், காலை 7.00 மணிக்கு ஆஞ்சநேயர், கோகுல கண்ணன், காலை 10.00 மணிக்கு செங்குழுநீர் மாரியம்மன், திருமுறை நாயகி, ஜோதிலிங்கேஸ்வரர், அய்யப்பன், நடராஜர் கோவில்களின் கும்பாபிஷேகமும், 10.25 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், காங்., பிரமுகர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பாலமுருகன், திருப்பணி குழு கவுரவத் தலைவர் வைத்திலிங்கம், தலைவர் வெங்கட்ராமன், உறுப்பினர்கள் சீனுவாசன், சுந்தரமூர்த்தி, தங்கராசு, சபாபதி, மஞ்சினி, சம்பத், தாமோதரன், கண்ணன் (எ) பழனி, கனிக்கண்ணன், கார்த்திகேயன், ராமலிங்கம், ஜோதி, சாந்தக்குமார் உள்ளிட்டவிழாக்குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி, சேலியமேடு மதுரகவி ஆழ்வார் சபை, திருமலை திருப்பதி பாதயாத்திரை குழு சார்பில்சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.