பதிவு செய்த நாள்
13
மார்
2025
05:03
கும்பம்: அவிட்டம் 3, 4 ம் பாதம்; உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தையும் பார்ப்பதால் உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும். பிரச்னை, வழக்கு என்று ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆவேசத்திற்கு இக்காலத்தில் இடம் கொடுக்க வேண்டாம். குழந்தைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது. சிலர் உங்களுக்கு எதிராக செயல்படுவர் என்பதால் விழிப்புடன் செயல்படுவது அவசியம். உடன் பணிபுரிபவர்களும் உங்களுக்கு எதிராக மாறக்கூடும் என்பதால் அலுவலகத்தில் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதும், அதிகாரிகளின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதும் உங்களுக்கு நல்லது. தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கூட்டு கிரகங்களால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகலாம். இந்த நேரத்தில் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை ஏற்பதும் உங்களுக்கு நிம்மதியான நிலையை உண்டாக்கும். பணவரவிலும் தடை ஏற்படலாம் என்பதால் ஒவ்வொரு வேலையிலும் நிதானமாக இருக்க வேண்டும். உங்கள் உடல் நிலையில் கவனம் வேண்டும். குடும்பஸ்தர்கள் வழக்கமான வேலையில் மட்டும் ஈடுபடுவது நன்மையை உண்டாக்கும். மாணவர்கள் ஆசிரியரின் அறிவுரையை ஏற்பது நல்லது.
சந்திராஷ்டமம்: ஏப். 10, 11.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 18, 26, 27. ஏப். 8, 9.
பரிகாரம்: குல தெய்வத்தை வழிபட குறைகள் நீங்கும்.
சதயம்: வாழ்க்கையின் சூட்சுமம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ராகு பகவானும், சூரியனும் அரசு வழி முயற்சிகளில் தடை தாமதங்களையும் உண்டாக்குவார். பணவரவும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போகும். வியாபாரத்தில் சிறிய தடைகளை சந்திக்க நேரும். குடும்பத்திலும் குழப்பம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது, நல்ல நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்பதும், வேலைகளில் கவனமாக இருப்பதும், உடல் நிலையில் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம். குருபகவான் அஷ்டம, ஜீவன ஸ்தானங்களையும் பார்ப்பதால் என்ன பிரச்னை வந்தாலும் அதை உங்களால் சமாளிக்க முடியும். எதிர்ப்புகளை வெல்ல முடியும். தொழிலில் லாபம் காண முடியும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் விலகும். கவனமாக செயல்பட்டால் நினைப்பதை சாதிக்க முடியும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். பிள்ளைகளுக்காக செலவு அதிகரிக்கும். அதிகபட்சம் உழைக்க வேண்டியதாக இருக்கும். உறவு மத்தியிலும் பிரச்னைகள் உருவாகும் என்பதால் இந்த மாதம் முழுவதும் நீங்கள் நிதானமாக இருந்து செயல்படுவது நல்லது. வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி வருவதுடன் பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் அதிகபட்சமான அக்கறை தேவை.
சந்திராஷ்டமம்: மார்ச் 15, ஏப். 11, 12.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 22, 26, 31. ஏப். 4, 8, 13.
பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட தொல்லை விலகும்.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்; சூழ்நிலை அறிந்து செயல்பட்டு நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ஏற்ற இறக்கமான மாதம். குரு பகவானால் உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். வாகனம், வீடு போன்றவற்றில் செலவு ஏற்படும். 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் பிள்ளைகள் வழியில் சங்கடங்களை அதிகரிப்பார். குரு பகவானின் பார்வை சாதகமாக இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். பணிபுரியும் இடத்தில் நடைபெறும் சூழ்ச்சிகளை கண்டறிந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகளை சமாளித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும். குடும்பத்திற்காக செலவு அதிகரிக்கும். இந்த நேரத்தில், தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். எந்த ஒரு வாக்குறுதியும் யாருக்கும் இந்த நேரத்தில் வழங்கிட வேண்டாம். கையில் பணம் இருக்கும்போது அதை கவனமாக வைத்திருக்கவும் இல்லை என்றால் களவு போகவும் வாய்ப்புண்டு. மாணவர்கள் ஆசிரியரின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 15, 16. ஏப். 12, 13.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 21, 26, 30. ஏப். 3, 8.
பரிகாரம்: அனுமனை வழிபட நன்மைகள் உண்டாகும்.