திருக்கோஷ்டியூர் மாசித் தெப்ப விழாவில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2025 01:03
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ பத்தாம் நாளான நேற்று தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி வலம் வந்தார். பெண்கள் குளக்கரையைச் சுற்றிலும் தீபம் ஏற்றி பெருமாளை வழிபட்டனர். இன்று காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 11 நாட்கள் நடைபெறும் மாசி தெப்ப உத்ஸவம் மார்ச் 5ல் துவங்கியது. தினசரி காலை சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்றது.
ஒன்பதாம் நாளில் வெண்ணெய்த்தாழி சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று பத்தாம் நாளை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து தெப்பக்குள மண்டபம் எழுந்தருளினார். மதியம் 12:16 மணிக்கு சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தார். குளத்தைச் சுற்றிலும் பெண்கள் விளக்கேற்றி பெருமாளை தரிசித்தனர்.
இரவில் மீண்டும் தெப்பத்தில் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் எழுந்தருளி குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். குளத்தை சுற்றி பக்தர்கள் கூடி பெருமாளை தரிசித்தனர். இன்று தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும்,இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி திருவீதி உலாவுடனும் உத்ஸவம் நிறைவடைகிறது.