பதிவு செய்த நாள்
18
மார்
2025
11:03
விஜயநகரா மாவட்டம், ஹரபனஹள்ளியிலிருந்து 9 கி.மீ., தொலைவில் உள்ளது பாகளி கிராமம். இக்கிராமத்தில் உள்ளது கல்லேஸ்வரா கோவில். இது ஒரு சிவன் கோவிலாகும். கோவிலில் 1,000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் உள்ளது. இந்த கோவில் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு உள்ளது. கோவில், ராஷ்டிரகூட வம்சம், மேற்கு சாளுக்கிய பேரரசு ஆகிய இரண்டு கன்னட வம்சத்தை சேர்ந்த ஆட்சியாளர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. 10ம் நுாற்றாண்டை சேர்ந்த, 36 கன்னட கல்வெட்டுகள் உள்ளன. இந்த கோவிலை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சின்னமாக அறிவித்துள்ளது.
இதில் சிவன் மட்டுமின்றி உமா மகேஸ்வரர், விநாயகர், முருகன், சரஸ்வதி, நரசிம்மர், சூரிய பகவான் ஆகிய கடவுள்களின் சிலைகளும் உள்ளது. கோவிலில் பிரதான சன்னிதியை தவிர, எட்டு சிறிய சன்னிதிகள் உள்ளன. ஐம்பது துாண்கள், மண்டபங்கள், என கோவிலே பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. ஏராளமான சிற்பங்களும் செதுக்கப்பட்டு உள்ளன. இந்த சிற்பங்களில் பல காம கலைகளை பிரதிபலிக்கும் விதமாக உள்ளது. கோயிலின் கோபுரம் ஆரம்பகால கட்டட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது. பழமையான கோவிலாக இருந்தாலும், கோவில் நிர்வாகத்தின் பராமரிப்பின் காரணமாகவே இன்றும் புதியது போலவே காட்சி அளிக்கிறது. இந்த கோவிலில் உள்ள சிவனை வழிபடும் போது, மன அமைதி கிடைப்பதாக பக்தர்களின் நம்பிக்கை.
பக்தர்கள் கோவிலுக்கு செல்லும்போது, வரம் கேட்பதையே வாடிக்கையாக வைத்து கொள்ளாமல், மன அமைதியையும், மன உறுதியையும் கேட்டால், வாழ்க்கை சுகமாக இருக்கும். இந்த கோவிலுக்கு செல்வோர் அருகில் உள்ள, ஹடகாலி வாடகை கல்லேஸ்வரா கோவில், அம்பாலி கல்லேஸ்வரா கோவில் ஆகியவறறுக்கும் சென்று தரிசனம் செய்யலாம்.
செல்வது?; மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் இருந்து, ஹரப்பனஹள்ளி ரயில் நிலையத்திற்கு செல்லவும். பின், அங்கிருந்து டாக்சி மூலம் கோவிலை அடையலாம்.மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, விஜயநகரா பஸ் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து, ஹரப்பனஹள்ளிக்கு பஸ் மூலம் வரவும். இதன் பின், டாக்சி மூலம் கோவிலை அடையலாம். – நமது நிருபர் –