பதிவு செய்த நாள்
18
மார்
2025
12:03
பெங்களூரு, பன்னர்கட்டாவில் இருந்து 2 கி.மீ., தொலைவில் சம்பகதாமா சுவாமி கோவில் அமைந்துள்ளது. 12ம் நுாற்றாண்டில் ஹொய்சாளர் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. அதன் பின், விஜயநகர சாம்ராஜ்ஜியம் காலகட்டத்தில், கோவில் சீரமைக்கப்பட்டு உள்ளதாக, அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இக்கோவில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். சுவாமிக்கு ‘சம்பிகே’ மலர் அர்ப்பணிப்பதால், சம்பகதாமா சுவாமி என்று அழைக்கப்படுகிறார். கோவில் நுழைவு வாயிலில் பிரமாண்ட ராஜகோபுரம் பக்தர்களை வரவேற்கிறது. 12ம் நுாற்றாண்டை சேர்ந்த கோவிலாக இருந்தாலும், சமீபத்தில் தான் கோவில் திருப்பணிகள் நடந்து, வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. இரண்டு மண்டபங்கள், கருவறைகள் திராவிட கட்டடகலையில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில், லட்சுமி – பூதேவியுடன் சம்பகதாமா அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் உள்ள தெப்பகுளம், பாண்டவர்களால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் மஹாராஜா ஜனமேஜெயா, மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்துள்ளார். உடல் நலம் மேம்பட, முனிவர்களின் உதவியை அவர் நாடினார். முனிவர் ஒருவர், ‘உங்களின் மூதாதையர் கட்டிய சம்பகதாமா சுவாமி கோவிலுக்கு செல்லுங்கள்’ என்று அறிவுரை கூறினார்.
தெப்பகுளம்; இதை ஏற்றுக் கொண்ட ராஜாவும், கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது நோய் வாய்ப்பட்ட நாய் ஒன்று, குளத்தின் அருகில் இருப்பதை பார்த்தார். அந்த நாய், குளத்தில் உள்ள தண்ணீர் குடித்தவுடன், அதற்கு இருந்த நோய் குணமடைந்து, ஆரோக்கியமானது. இதை பார்த்த ராஜா, குளத்தில் குளித்தார். குளித்தவுடன், அவருக்கு இருந்த அனைத்துவிதமான நோய்களும் பறந்துபோயின. அப்போது ஆஞ்சநேயர் அவர் முன் தோன்றினார். ‘இந்த தெப்பகுளம் தான் என் வீடு. மருத்துவ குணம் கொண்ட இந்த தீர்த்தத்தை பருகுவதால், நோய்கள் குணமாகும்’ என்றார். இந்த தெப்ப குளத்துக்கு ‘சுவர்ணமுகி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சம்பகதாமா சுவாமியை தரிசித்த பின், கோவில் பின்புறம் சிறிய மலை உள்ளது. இந்த மலையில், நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளில், சிறியவர் முதல் பெரியவர்கள் தாராளமாக நடந்து சென்று சுவாமியை தரிசிக்கலாம்.
1தினமும் காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
2கோவிலில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் பன்னரகட்டா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது.
3பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து இக்கோவிலுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கார், இரு சக்கர வாகனத்திலும் செல்லலாம். – நமது நிருபர் –