பதிவு செய்த நாள்
18
மார்
2025
12:03
பெலகாவி மாவட்டத்தில், பல்வேறு புண்ணிய தலங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனக்கென வரலாற்று சிறப்பு, மகத்துவத்தை கொண்டுள்ளன. இவற்றில் புராதன வெங்கடேஸ்வர சுவாமி கோவிலும் ஒன்றாகும். மல்லப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோவில், பக்தர்களை கைவீசி அழைக்கிறது. நர்குந்த் மற்றும் ராமதுர்கா சமஸ்தானத்தின் கடைசி அரசராக ஆட்சி புரிந்த ராஜா ராமராவ் வெங்கடராவ் பாவே, வெங்கடேஸ்வர சுவாமி கோவிலை கட்டினார். இந்த வம்சத்தினரின் குல தெய்வம் வெங்கடேஸ்வர சுவாமியாகும். ராஜா ராமராவ், வெங்கடேஸ்வர சுவாமியின் தீவிர பக்தர். ஆண்டுதோறும் ஸ்ரீராம நவமி நாளன்று உபவாசம் அனுஷ்டிப்பார். மறுநாள் வெங்கடேஸ்வர சுவாமி விக்ரஹத்தை, ஸ்ரீராமன் போன்று அலங்கரிப்பார். விக்ரஹத்தை ரதத்தில் அமர்த்தி, ரத உத்சவத்தை துவக்கி வைத்த பின், பிரசாதம் சாப்பிட்டு விரதத்தை முடிப்பார். அந்த அளவுக்கு வெங்கடேஸ்வர சுவாமி மீது, அபார பக்தி கொண்ட ராஜா ராமராவ், அற்புதமான கோவிலை கட்டினார்.
அற்புதமான கலை நயனத்துடன் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் உட்புறத்தில் 28 துாண்கள் கொண்ட, பிரம்மாண்ட வளாகம் உள்ளது. கர்ப்ப குடியின் வெளிப்பகுதியில், 12 துாண்கள் கொண்ட அரங்கம் உள்ளது. இங்கு தெற்கு, வடக்கு, மேற்கு திசையில் சிறிய கதவுகள் உள்ளன. தத்தாத்ரேயா, ஆஞ்சநேயர், பாண்டுரங்க விட்டலா விக்ரஹங்களையும் காணலாம். கர்ப்பகுடியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி விஹ்ரகத்துக்கு, நான்கு கைகள் உள்ளன. சங்கு, சக்கரம், வில், அம்பு ஏந்தியுள்ளன. கோவில் முன்பாக கிருஷ்ணர், லட்சுமி வெங்கடேஸ்வரர், விஷ்ணு, சத்ய நாராயணா கடவுள் சிலைகள் உள்ளன. கர்ப்பகுடி பிரம்மாண்ட கோபுரம் கொண்டுள்ளது. கோவிலில் வைகுண்ட ஏகாதசி, வெகு விமரிசையாக கொண்டாடப்படும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பல்லக்கு உத்சவம் நடக்கும். மாதந்தோறும் பவுர்ணமி நாளில், சத்ய நாராயண பூஜை நடக்கும். வெங்கடேஸ்வர சுவாமி கோவில் அருகில், பசுக்களுக்காக கொட்டகை கட்டப்பட்டுள்ளது. மைசூரில் நடப்பது போன்று, இந்த கோவிலிலும் தசரா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் மைசூரில் அக்டோபரில் நடக்கும் தசரா பண்டிகை, வெங்கடேஸ்வர கோவிலில் ஏப்ரலில் நடக்கும்.
இம்முறை ஏப்ரல் 14ம் தேதியன்று, தசரா நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இதில் பங்கேற்க சுற்றுப்பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இசை கச்சேரி, பஜனை, பக்தி பாடல்கள் என, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடக்கும். தசராவுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
எப்படி செல்வது?; பெலகாவியின், ராமதுர்காவின், கித்துார் கிராமத்தில் மல்லப்பிரபா ஆற்றங்கரையில், வரலாற்று பிரசித்திபெற்ற வெங்கடேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. ராமதுர்காவுக்கு அரசு, தனியார் பஸ் வசதி, ரயில் வசதி உள்ளது. விமானத்தில் வருவோர், ஹூப்பள்ளி, பெலகாவி விமான நிலையத்தில் இறங்கி, சாலை வழியாக கோவிலுக்கு செல்லலாம்.அருகில் உள்ள கோவில்கள்: வரலாற்று பிரசித்தி பெற்ற தோரகல் கிராமம், வீரபத்ரேஸ்வரா கோவில், தீர மாருதி கோவில், லட்சுமி நாராயணர் கோவில், சந்திரகிரி, முதகவி.– நமது நிருபர் –