பதிவு செய்த நாள்
22
மார்
2025
10:03
ஓசூர்; தனியார் நிறுவன சி.இ.ஓ., பதவியில் இருந்தவர், அதை உதறி விட்டு துறவறம் மேற்கொண்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அலசநத்தம் வெங்கடேஷ் நகரில், வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள மலை அடிவாரத்தில், பத்ரகாசி ஆசிரமத்தை அமைத்து, அங்குள்ள குகையில் குகை சுவாமிகள் என்ற சங்கர சாக்தானந்த சரஸ்வதி சுவாமிகள், 63, வாழ்ந்து வருகிறார். பக்தர்களுக்கு தினமும் அருளாசி வழங்கி, ஹிந்து தர்மத்தையும், சனாதனத்தையும் மக்களிடையே பரப்புகிறார்.
இது, ஓசூர் பகுதி மக்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரியும் என்றாலும், சங்கர சாக்தானந்த சரஸ்வதி சுவாமிகள், துறவறம் மேற்கொள்ளும் முன் எந்த நிலையில் இருந்தார்... திருச்சி மாவட்டம், தின்னியம் கிராமத்தில் பிறந்தவர் சங்கர். மும்பையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தில் சி.இ.ஓ., பதவியில் இருந்த இவர், தனது, 40வது வயதில் கோவை மாவட்டத்திற்கு திட்டப்பணிக்காக வந்தார். அப்போது ஒரு ஞாயிற்றுக்கிழமை, கரூர் மாவட்டம், நெரூரில் பிரசித்தி பெற்ற சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்திற்கு சென்றார். அங்கு ஞானம் பெற்ற அவர், குடும்ப வாழ்க்கையை துறந்து, துறவறம் மேற்கொண்டார். கூடுதல் ஊதியம் கொடுப்பதாக அந்நிறுவனம் கூறிய போதும், ‘அது வேண்டாம்; நான், எனக்கு என வாழ மாட்டேன், நாம், நமக்கு என, உலகத்திற்காக வாழ போகிறேன்’ என கூறி விட்டு, துறவறத்தை மேற்கொண்டு, தன் பெயரை சங்கர சாக்தானந்த சரஸ்வதி சுவாமிகள் என மாற்றிக்கொண்டார்.
அதன் பின் சமஸ்கிருதத்தில் பி.எச்.டி., பட்டம் பெற்ற இவர், சதாசிவ பிரம்மேந்திரரின் இதுவரை உலகில் அறியப்படாத, இரு படைப்புகளின் ஓலை சுவடியின் ஒரே பிரதியை, அடையாறு நுாலகத்திலிருந்து மிக நீண்ட தேடலுக்கு பின் கண்டுபிடித்தார். சதாசிவ பிரம்மேந்திரரின் அறிய படைப்பான, ‘ஸ்வானுபூதிப்பிரகாச’ என்ற இலக்கிய படைப்பை, 20 பக்க கட்டுரையாக சங்கர சாக்தானந்த சரஸ்வதி சுவாமிகள் மொழிபெயர்த்து வெளியிட்டார். கடந்த, 2019ல், ஓசூர் வந்த இவர், வெங்கடேஷ் நகரில் உள்ள வெங்கடரமண சுவாமி கோவில் மலை அடிவாரத்தில் உள்ள குகையில் தங்கி, பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
ஹிந்து சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால், அங்கு சென்று பக்தர்களுக்கு சொற்பொழிவு மற்றும் சனாதன தர்மம் குறித்து போதிக்கிறார். ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொண்டு, குகைக்குள் தியானம் செய்து வருகிறார்.இது குறித்து, சங்கர சாக்தானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறுகையில்,‘‘ ஓசூரில் உள்ள பிரம்மா, விஷ்ணு, சிவன் மலைகள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கின்றன. இங்கு வந்து குகையில் தவம் செய்ய வேண்டும் என, சதாசிவ பிரமேந்திரர் அசரீரியாக கூறினார். அதையேற்று, ஓசூரில் குகையை தேடி அழைந்தேன். பிரம்ம மலைக்கு முதலில் சென்றேன். பின்னர் வெங்கடரமண சுவாமி கோவில் மலை அடிவாரத்தில் இருந்த குகையை கண்டறிந்தேன். அதன்படியே, இங்கு வந்து குகையில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறேன். பல சித்தர்களின் நடமாட்டம் இந்த குகையில் உள்ளது. மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை சனாதனம் சொல்கிறது. சமுதாய தர்மம் தான் சனாதன தர்மம்,’’ என்றார்.