பதிவு செய்த நாள்
24
மார்
2025
11:03
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று எட்டாம் நாள் விடையாற்றி உற்சவத்தில், கந்தபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 15ம் தேதி திருக்கல்யாண வைபவத்துடன் நிறைவடைந்தது. இதில், முக்கிய விழாவாக, 9ம் தேதி தேர் திருவிழாவும், 12ம் தேதி தெப்ப திருவிழாவும், 15ம் தேதி திருக்கல்யாண உத்சவம் நடந்து முடிந்தது. திருக்கல்யாணம் உத்சவம் நிறைவடைந்த அன்றிலிருந்து 13 நாட்களுக்கு, விடையாற்றி உத்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 8ம் நாள் உத்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பகல் 11:00 மணிக்கு உத்சவர் கந்தசுவாமி பெருமானுக்கு மஹா அபிஷேகமும், தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு மஹா தீபாராதனையும், அர்ச்சனையும் நடந்தது. விழாவில், கந்தபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கந்தபெருமானை வழிபட்டனர்.