பதிவு செய்த நாள்
29
மார்
2025
10:03
ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கான வழிபாட்டினைச் செய்வதுடன், அன்னதானமும் செய்தால் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும்.
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் உள்ளது. அமாவாசை என்பது பகல் ஆரம்பிப்பதற்கு முன்புள்ள விடியற்காலம் போன்றது. காலைப்பொழுது பூஜைக்குச் சிறந்தது என்பதால், முன்னோர் வழிபாட்டுக்கு அமாவாசையைத் தேர்ந்தெடுத்தனர். இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வது சிறப்பு. (தர்ப்பணம் என்பதற்கு திருப்தியுடன் செய்வது என்று பொருள். சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் (கவனம்) செய்வது என்று அர்த்தம்) அவ்வாறு இயலாத பட்சத்தில், மந்திரம் ஏதும் சொல்லாமல் பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அவருக்கு கொடுக்க வேண்டிய அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, வஸ்திரம் முதலானவற்றை வேறு யாருக்கேனும் தானம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும். பித்ரு பூஜையைச் சரியாகச் செய்யாவிட்டால் முன்னோர்களின் சாபம் ஏற்படும். அவ்வாறு சாபம் பெற்ற குடும்பங்களில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. வீட்டில் குலதெய்வத்தை வழிபட சிறப்பான வாழ்வு அமையும்.