மயிலாடுதுறை வைத்தியநாத சுவாமி கோவிலில் கார்த்திகை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2025 12:04
மயிலாடுதுறை; வைத்தியநாத சுவாமி கோவிலில் நடந்த கார்த்திகை வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் நவகிரகங்களில் செவ்வாய் பகவான், தன்வந்திரி சித்தர் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். இங்கு முருகனின் ஆறுபடை வீட்டிற்கு இணையாக செல்வமுத்துக்குமாரசாமி தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். கார்த்திகை திருநாளன்று செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். பங்குனி மாத கார்த்திகை நட்சத்திர நாளான இன்று காலை செல்வ முத்துக்குமார சுவாமி சன்னதியில் இருந்து சண்முகர் மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டார். தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் மற்றும் வாசனை திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை மனமுருக பிரார்த்தனை செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் தலைமையிலான கோவில் சிப்பந்திகள் செய்திருந்தனர்.