பதிவு செய்த நாள்
05
ஏப்
2025
10:04
பல்லடம்; பல்லடத்தில், பழமை வாய்ந்த பாலதண்டபாணி கோவிலில், நிலவு கால் வைக்கும் நிகழ்வு நேற்று நடந்தது.
பல்லடம் மங்கலம் ரோட்டில், விநாயகர் பாலதண்டபாணி கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் தீர்மானித்தனர். அறநிலையத்துறையின் அனுமதி பெற்று, கடந்த ஓராண்டுக்கு முன், பாலாலய கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, திருப்பணி துவங்கியது. இதனையடுத்து, கோவில் கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வரும் நிலையில், நேற்று, நிலவுக்கால் வைக்கும் பூஜை நடந்தது. முன்னதாக, விநாயகர், முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனையடுத்து, மஞ்சள் பூசப்பட்டு, மலர்கள் வைத்தும், மாலை அணிவித்தும் நிலவு கால்களுக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, நிலவு கால்கள் வைக்கும் இடத்தில் பக்தர்கள் ஐம்பொன் வைத்து வழிபட்டனர். அரோகரா கோஷம் முழங்க விநாயகர் மற்றும் முருகன் கோவில்களுக்கு நிலவு கால்கள் வைக்கப்பட்டன. பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்குள் திருப்பணிகள் முழுமையாக நிறைவடைந்து, கும்பாபிஷேகத்துக்கு கோவில் தயார் நிலையில் இருக்கும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.