19 ஆண்டுகளுக்கு பின் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2025 09:04
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
வடக்கே காசி தெற்கே தென்காசி என்று அழைக்கப்படும் சிவதலங்களில் ஒன்றாக உள்ள தென்காசி மாவட்ட நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்றதும் பழமை வாய்ந்த திருத்தலமான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 3ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 5 மணிக்கு விநாயகர், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 7 மணிக்கு மகா பூர்ணாகுதி, திரவ்யாகுதி நடைபெற்றது. 9 மணிக்கு மேல் உலகம்மாள் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடந்து மகாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.