பதிவு செய்த நாள்
14
ஏப்
2025
03:04
சபரிமலை: சபரிமலையில் திருவாங்கூர் தேவசம் போர்டு தயாரித்த ஐயப்பனின் உருவம் பொறித்த தங்க லாக்கெட்டுகள் விநியோகம் துவங்கியது.
விஷூ தினமான இன்று சபரிமலை சன்னதியில் வைக்கப்பட்டுள்ள இந்த லாக்கெட்டுகளை, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களிடையே விநியோகிக்கும் பணியை, மாநில தேவசம் அமைச்சர் வி.என். வாசவன் தொடங்கி வைத்தார்.
இது குறித்து தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கை: சன்னிதானத்தில் உள்ள கொடிமரத்தின் கீழ் காலை 6.30 மணிக்கு அதிகாரப்பூர்வ திறப்பு விழா நடைபெற்றது.தங்க லாக்கெட்டுகள் விற்பனை விநியோகம் மூலம், ஐயப்ப பக்தர்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியுள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த ஆந்திராவை சேர்ந்த ஒருவர், அமைச்சரிடமிருந்து முதல் லாக்கெட்டைப் பெற்றார். தொடர்ந்து, சபரிமலை தந்திரி (தலைமை பூசாரி) கண்டரரு ராஜீவரரு, தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் மற்றும் வாரிய உறுப்பினர் ஏ. அஜிகுமார் ஆகியோர் மீதமுள்ள பக்தர்களுக்கு லாக்கெட்டுகளை விநியோகித்தனர்.இந்த ஐயப்ப லாக்கெட்டுகள் 2 கிராம், 4 கிராம் மற்றும் 8 கிராம் என வெவ்வேறு எடைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. 2 கிராம் தங்க லாக்கெட்டின் விலை ரூ.19,300, 4 கிராம் தங்க லாக்கெட் ரூ.38,600 மற்றும் 8 கிராம் எடையுள்ள தங்க லாக்கெட் ரூ.77,200 என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் மொத்தம் 100 பக்தர்கள் ஏற்கனவே இந்த லாக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.