பதிவு செய்த நாள்
15
ஏப்
2025
12:04
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், தமிழ் புத்தாண்டை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமியை தரிசித்து சென்றனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலைத்தொடரின் ஏழாவது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் வனத்துறையினர் பக்தர்கள் மலையேற அனுமதி அளித்து வருகின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினமான நேற்று, அதிகாலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயார், விநாயகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் இரவு முதலே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மலையேற துவங்கினர். சித்திரை முதல் நாளையொட்டி, காவடி எடுத்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்.