பதிவு செய்த நாள்
15
ஏப்
2025
12:04
சூலூர்; தமிழ் புத்தாண்டு பிறந்ததை ஒட்டி, சூலூர் வட்டார கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தமிழ் புத்தாண்டு பிறந்ததை ஒட்டி, சூலூர் வட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவில், அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன், கணியூர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில், சூலூர் சிவன் கோவில், பெருமாள் கோவில், மேற்கு அங்காளம்மன் கோவில், அத்தனூர் அம்மன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி, அம்மன் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் இறைவனை தரிசித்து மனமுருக வேண்டினர். புத்தாண்டை ஒட்டி, புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. புத்தாண்டின் பலன்கள் விளக்கப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவில், நாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், திருமலைநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள கரி வரதராஜ பெருமாள் கோவில்கள், நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மபெருமாள் கோவில், வரசித்தி விநாயகர் கோவில், சக்தி மாரியம்மன் கோவில், தொப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள ஜங்கமநாயக்கன்பாளையம் நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் பெருமாள் கோவில், வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில், பெரியநாயக்கன்பாளையம் ஈஸ்வரன் கோவில், சின்னதடாகம் கரி வரதராஜ பெருமாள் கோவில், பன்னிமடை கிருஷ்ணசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தமிழ் புத்தாண்டை ஒட்டி அதிகாலை சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.