பதிவு செய்த நாள்
24
ஏப்
2025
11:04
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம், குமரகோட்டம் முருகன் கோவிலில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று, கோவில் உட்பிரகாரத்தில் வெள்ளி தேரோட்டம் நடைபெறும். இதில், வள்ளி, தெய்வானையருடன் மலர் அலங்காரத்தில், முருகபெருமான் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் எழுந்தருளி பவனி வருவார். அதன்படி, நேற்று முன்தினம், இரவு 7:45 மணிக்கு, கோவிலில் வழக்கம்போல வெள்ளி தேரோட்டம் நடந்தது. இதில், பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றபோது, தேரின் உச்சியில் இருந்த குடை திடீரென சாய்ந்ததால், பக்தர்கள் பீதி அடைந்தனர். எனினும், கீழே விழாததால், யாருக்கும் பாதிப்பு இல்லை. இதுகுறித்து காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் செயல் அலுவலர் கேசவன் கூறியதாவது: குமரகோட்டம் கோவிலில் திருப்பணி நடந்து வருகிறது. கட்டுமானப் பணியை மறைப்பதற்காக கட்டப்பட்டிருந்த பச்சை நிற துணி தொங்கியவாறு இருந்துள்ளது. தேர் செல்லும்போது, அந்த துணி தேரின் குடையில் சிக்கியுள்ளது. துணிதானே, தானாக விடுபட்டுவிடும் என, தேரை இழுத்துள்ளனர். அப்போது துணியில் சிக்கிய குடை சாய்ந்ததே தவிர, முற்றிலும் விழவில்லை. லேசாக சாய்ந்த தேர் குடை, கோவில் நிர்வாகம் சார்பில், உடனடியாக சீரமைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.