பதிவு செய்த நாள்
28
ஏப்
2025
03:04
உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம், ஆனம்பாக்கம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த 16ம் தேதி, அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவில் தினமும், மதியம் 2:00 மணிக்கு மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. கடந்த 24ம் தேதி, அர்ச்சுனன் வில் வளைப்பு நாடகம் துவங்கி, ஒவ்வொரு இரவும் ராஜசுய யாகம், பகடை துயில் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நாடகங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இன்று காலை 8:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அர்ச்சுனன் தபசு நடந்தது. அதில், அர்ச்சுனன் பனை மரத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒவ்வொரு படிக்கட்டுகளில் ஏறிச் உச்சிக்கு சென்றார். அங்கு, சிவபெருமானை நோக்கி தவம் செய்தார். அப்போது, பனை மரத்தின் கீழே குழந்தைபேறு வேண்டி, பெண்கள் தரையில் அமர்ந்து வேண்டுதல் செய்தனர். பின், அர்ச்சுனன் பனை மரத்தின் மரத்தின் உச்சியில் அமர்ந்தவாறு பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழங்கள், விபூதி, பூக்கள் ஆகியவற்றை பக்தர்களை நோக்கி வீசினார். அதை ஆர்வமுடன் பெண்கள் தங்கள் மடியில் தாங்கியவாறு பெற்றுக்கொண்டனர். இந்த அக்னி வசந்த விழாவில் அடுத்தக்கட்ட நிகழ்வாக, வரும் 4ம் தேதி காலை, துரியோதனன் படுகளமும், மாலை தீமிதி விழாவும் நடக்க உள்ளது.