திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் கதலி விருட்சம் வாகனத்தில் சுவாமி உலா
பதிவு செய்த நாள்
05
மே 2025 05:05
திருப்போரூர்; திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழாவையொட்டி, 7ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள ருத்திரகோட்டி மற்றும் பட்சி தீர்த்தம் என அழைக்கப்படும் திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை வேதகிரீஸ்வரர் கோவில், உலக புகழ்பெற்ற சிவ தலம். சைவ சமய குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற இத்தலத்தில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், 10 நாட்கள் சித்திரை பெருவிழா நடைபெறும். அதன்படி, இந்தாண்டின் சித்திரை பெருவிழா கடந்த, 1ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. வேதகிரீஸ்வரர், வெள்ளி ரிஷப வாகனம், புருஷா மிருக வாகனம், நாக வாகனம், கதலி விருட்சம் உள்ளிட்ட பல வாகனங்களில், தினமும் வலம் வருகிறார். பிரதான ஏழாம் நாள் திருவிழாவான தேர் திருவிழா, 7ம் தேதி நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் தனிச்சிறப்பாக ஐந்து ரதங்களில், தேர் திருவிழா நடைபெற உள்ளது. விழாவை ஒட்டி, 7ம் தேதி காலை, 5:30 மணிக்கு வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமியருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற உள்ளது. பின், அலங்கரிக்கப்பட்ட ஐந்து தேர்களில் எழுந்தருளி, மாடவீதிகளில் வலம் வருவர். கோவில் செயல் அலுவலர் தலைமையிலான குழுவினர், இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இன்று விழாவின் ஐந்தாம் நாள் காலை உற்சவத்தில், வேதகிரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கதலி விருட்சம் வாகனத்தில், திரிபுரசுந்தரி உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமியருடன் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
|