பதிவு செய்த நாள்
14
மே
2025
11:05
பெங்களூரில் பல்வேறு பகுதிகளில், ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனி சிறப்பு கொண்டவை. வரலாற்று பிரசித்தி பெற்றவை. இத்தகைய கோவில்கள் பெங்களூருக்கு பெருமை சேர்க்கின்றன. இவற்றில் மஹாலட்சுமி லே – அவுட்டில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்றாகும். மஹாலட்சுமி லே – அவுட், பெங்களூரின் பிரசித்தி பெற்ற பகுதிகளில் ஒன்று. இப்பகுதியில் உயரமான குன்றின் மீது குடிகொண்ட வீராஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 1973ல் குன்றின் மீது, மாருதியின் உருவம் தென்பட்டது. இதை பார்த்த பக்தர்கள், மலையில் ஆஞ்சநேயர் குடிகொண்டுள்ளதை உணர்ந்து, பக்தி பரவசம் அடைந்தனர். அதன்பின் இங்கு இக்கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதே ஆண்டு சிலை வடிக்கும் பணிகள் துவக்கப்பட்டன. 1976, ஜூன் 7ம் தேதியன்று, பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தர்களே பணம் திரட்டி கோவிலை கட்டி முடித்தனர். அன்று முதல் கோவிலுக்கு பக்தர்கள் வர துவங்கினர். வீராஞ்சநேயரை தரிசித்தால், நவகிரஹ தோஷங்கள் நீங்கும்; குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் அகலும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. ஆஞ்சநேயர் வீரம், பராக்கிரமத்துக்கு பெயர் பெற்றவர். இவரை தரிசிப்பவர்களுக்கு மன பலம் அதிகரிக்கும். வாழ்க்கையில் பிரச்னைகளை கடந்து சாதிக்கும் துணிவு ஏற்படும் என்பது ஐதீகம். உள்நாடு, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து, வீராஞ்சநேயரை தரிசனம் செய்கின்றனர்.
ஹனுமன் ஜெயந்தி, ஸ்ரீராம நவமி உட்பட பண்டிகை நாட்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக வெண்ணெய் அலங்காரத்தில் ஹனுமனை பார்க்க, இரண்டு கண்கள் போதாது. செவ்வாய், சனிக்கிழமைகளில் பக்தர்கள் வெற்றிலை மாலை, வடை மாலை அணிவித்து வேண்டுதல் நிறைவேற்றுவது வழக்கம்.
எப்படி செல்வது?
பெங்களூரு, மஹாலட்சுமி லே – அவுட்டில், வீராஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மஹாலட்சுமி லே – அவுட்டுக்கு, பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆட்டோ, வாடகை வாகனங்கள் வசதியும் உள்ளன. மெட்ரோ ரயிலும் இயக்கப்படுகிறது.கோவில் தரிசன நேரம்: காலை 6:30 மணி முதல் மதியம் 1:30 வரை; மதியம் 3:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.தொலைபேசி எண்: 080 – 2349 1727