பெங்களூரில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதிகளில் ஒன்றான, பனசங்கரியின் கவிகா லே – அவுட்டில் உள்ளது ஸ்ரீ கலி ஆஞ்சநேயா கோவில். இக்கோவில் 600 ஆண்டுகள் பழமையானது. மக்களுக்காக 732 கோவில்களை அர்ப்பணித்தவரும், தத்துவஞானியுமான ஸ்ரீவியாசராயரால் விருஷாவதி, பசிமவாஹினி ஆறுகள் சங்கமிக்கும் இடங்களில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
ஆஞ்சநேயருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த சிலை, செந்துாரத்தால் பூசப்பட்டு இருக்கிறது. இடது கை ஹனுமரின் இடுப்பிலும்; வலது கை பக்தர்களை ஆசிர்வதிக்கும் நிலையிலும் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. கன்னடத்தில், ‘கலி’ என்றால் காற்று என்று பொருள். இந்த சிலை திறந்தவெளியில் காற்றோட்டமாக இருப்பதால், ‘கலி ஆஞ்சநேயா’ என்று பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது. காற்று கடவுளான வாயு மகன் என்பதாலும் கலி என்ற பெயர் வந்து இருக்கலாம்.
கோவிலில் உள்ள உயரமான ராஜகோபுரம் பக்தர்களை ஈர்க்கிறது. விநாயகர், வேணுகோபால சாமி, ராமருக்கு தனித்தனி சன்னிதிகள் அர்ப்பணிக்கப்பட்டு உள்ளன. கோவிலில் நவக்கிரஹங்களும் வைக்கப்பட்டு உள்ளன. வளாகத்தில் பிரம்மாண்ட ஹனுமன் சிலையும் உள்ளது. இந்த ஆஞ்சநேயரை வழிபட்டு செல்வதன் மூலம், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தீமைகளும் விலகி செல்லும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, ஹனுமன் கால்பாதத்தில் வைக்கப்படும் எலுமிச்சை வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால், ஹனுமனை தரிசித்து சென்றால் குணமாகும் என்றும் நம்பப்படுகிறது. ஆண்டு திருவிழாவை ஒட்டி கோவிலில் ரத உத்சவம் நடக்கிறது.
கோவிலில் நடை தினமும் காலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை திறந்திருக்கும்.
மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, பனசங்கரிக்கு அடிக்கடி பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. கே.ஆர்.மார்க்கெட்டில் இருந்து கோவில் 5 கி.மீ., துாரத்தில் உள்ளது.