கர்நாடகா – தமிழக மாநில எல்லையில் அமைந்து உள்ளது கோலார் மாவட்டம். பெங்களூருக்கு மிக அருகில் உள்ள இம்மாவட்டத்தில் ஆவனி சீதாம்மா, குருடுமலை விநாயகர் உட்பட ஏராளமான பழங்கால, வரலாற்று சிறப்புமிக்க கோவில்களும் உள்ளன. இதுதவிர சுற்றுலா பயணியர் விரும்பும் நிறைய மலையேற்ற தலங்களும் உள்ளன. மலை மீது அமைந்துள்ள சிவன் கோவில் சுற்றுலா பயணியர், பக்தர்களை கவரும் வகையில் உள்ளது.
கோலார் அருகே வேம்கல் கிராமத்தில் உள்ளது ஆந்திரஹள்ளி மலை. இந்த மலையின் உச்சியில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட, சூரிய மல்லேஸ்வரா கோவில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு படிக்கட்டுகள் வழியாக தான் செல்ல வேண்டும். துவங்கும் இடத்தில் பாதை சற்று கரடுமுரடாக இருந்தாலும், சிறிது துாரம் சென்றதும் படிக்கட்டுகள் சீராக உள்ளன. பக்தர்கள் வசதிக்காக இரும்பு கம்பியும் அமைக்கப்பட்டு உள்ளது.
மலை மீது ஏறி செல்லும் போது இளைப்பாற வேண்டும் என்று நினைத்தால், மலையில் அமர்ந்து கொள்ளலாம். கோவிலின் கருவறையில் சிறிய சிவன் சிலை உள்ளது. மலை உச்சியில் உள்ள ஒரு பாறையில், நந்தியின் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது. சூரிய ஒளி நேராக கோவில் வாசலில் விழுவதால், கோவிலுக்கு சூரிய மல்லேஸ்வரா என்று பெயர் வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் பச்சை, பசலேன காட்சி அளிப்பதால் மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும். இக்கோவிலுக்கு சென்று வந்தவர்கள், ‘குடும்பத்தினர், நண்பர்களுடன் செல்வதற்கு உகந்த கோவில். அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன; மலையேற்றம் மற்றும் சாமி தரிசனத்திற்கு ஏற்ற இடம்’ என்று கூறுகின்றனர். கோவிலின் நடை தினமும் காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
எவ்வளவு துாரம்?
பெங்களூரில் இருந்து வேம்கல் 57 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, கோலாருக்கு அடிக்கடி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோலார் சென்று அங்கிருந்து ஆட்டோ அல்லது டவுன் பஸ்கள் மூலம் வேம்கல்லை அடையலாம். காரில் சென்றாலும் கோவில் அடிவாரத்தில் பார்க்கிங் வசதியும் உள்ளது.