பதிவு செய்த நாள்
27
மே
2025
10:05
பொங்கலூர்; பொங்கலூர் வலசுப்பாளையம் ஸ்ரீ ஜெய் சக்தி ஞான விநாயகர் கோவிலில் உலகில் அமைதி நிலவவும், வன்முறை, தீவிரவாதம் போர்கள் அற்ற புதுயுகம் உருவாகவும், அனைத்து மக்களும் நலம் பெற வேண்டி பிரித்தியங்கிரா தேவி நிகும்பலா மஹாயாகம், கூட்டுப் பிரார்த்தனை, ஞான வேள்வி, மூத்தோர் ஆதரவு சரணாலயம் துவக்க விழா நடந்தது. யாகத்தில், 1108 சிவனடியார்கள் சங்கல்பம், 108 மூலிகைகள், 108 மூட்டை மிளகாய் சமர்ப்பணம் செய்யப்பட்டது.
இதில் கலந்துகொண்ட பா.ஜ.க., தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேசுகையில், நாம் எல்லோரும் வேற்று மதங்களாக இருக்கலாம். ஆனால், நாம் பாரதத்தாயின் பிள்ளைகள். இந்த நோக்கமே நம் எல்லோரையும் ஒருங்கிணைக்கச் செய்கிறது. உலகில் வேறு எங்கும் இப்படி ஒரு காட்சியை பார்க்க முடியாது. எல்லா மதங்களில் உள்ளவர்களும் ஒன்றிணைந்து ஒரு மதத்தின் நம்பிக்கையை பெருமைப்படுத்துவது, மதிப்பது இந்த மண்ணின் கலாச்சாரம். இந்த மண்ணில் பிறந்தவர்களால் மட்டும் தான் அதைச் செய்ய முடியும். உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஓர் ஒற்றுமையை பார்க்க முடியாது. யாகம் என்பது ஆன்மீகமாக மட்டுமல்ல தேசத்தை பாதுகாக்கும் நம் ராணுவ வீரர்களுக்கு கூடுதல் பலத்தை தரும். தேசத்தை அழிக்க நினைக்கிற தீய சக்திகள் அழிந்து போவதற்காகவும், இந்த தேசத்தில் மழை தேவையான அளவு பெய்யவும், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவும் நடத்தப்படுகிறது. இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளில் தான் ஆத்மா திருப்தி கிடைக்கிறது என்றார். தெய்வ சிகாமணி சுவாமிகள் பேசுகையில், கடவுள் என்பதற்கு என்ன வரையறை உள்ளது. பல கடவுளை வணங்குகிறோம். உலகில் அனைத்தையும் படைத்தவர், காப்பாற்றுபவர் கடவுள் என எல்லா மதங்களும் சொல்லும் வரையறை. உங்களை படைத்த உங்களது பெற்றோர் உங்களுக்கு கடவுளாகின்றனர். உலகில் உள்ள அனைத்தையும் மனிதர்கள் படைத்துள்ளனர். மனிதர் இல்லை என்றால் கடவுள்களே இருக்க முடியாது. பெற்றோர் இல்லை என்றால் மனிதர்கள் இல்லை. நீங்கள் தான் கடவுள். நாம்தான் கடவுள் என உணரும் போது ஞானம் உள்ளவராக ஆகின்றீர்கள். ஆட்சியாளர்கள் இறைவனாக இருக்க வேண்டும். தர்மத்திற்கு புறம்பாக செயல்படுபவர் அழிவர் என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செ.ம., வேலுச்சாமி, கட்சி சார்பற்ற விவசாயிகள் மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம், சிவசேனா மாநில துணைத்தலைவர் சசிகுமார், பாசன சபை தலைவர் கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.