திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2025 05:05
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை அடுத்து நடந்த மண்டலாபிஷேக பூஜைகள் நிறைவடைந்தது.
இக்கோயிலுக்கு 16 ஆண்டுகளுக்குப் பின் ஏப்.11ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மறுநாள் முதல் காலையிலும், மாலையிலும் மண்டல பூஜைகள் நடந்து மூலவருக்கு மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. 45வது நாளில் மண்டலாபிஷேக நிறைவை முன்னிட்டு காலை 9:15 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கின. பிச்சைக்குருக்கள் தலைமையில் பாஸ்கர் குருக்கள்,ரமேஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் யாகசாலை பூஜைகள் நடந்தன. பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்க தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். ஏற்பாட்டினை முன்னாள் தக்கார் நா.ஆறு.தங்கவேலு, செயல்அலுவலர் எஸ்.விநாயகம் அறநிலையத்துறை ஆய்வாளர் பிச்சுமணி, ஆகியோர் செய்தனர்.