பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் நாடபிரபு கெம்பேகவுடா கிராஸ், 4வது பிளாக் அஜ்வானி ரோட்டில் உள்ளது காலபைரேஸ்வரர் கோவில். இந்த கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. கால பைரவராக அவதரித்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இக்கோவில் ஹொய்சாளா மன்னர் விஷ்ணுவர்த்தனால் கட்டப்பட்டது என்று கல்வெட்டுகள் கூறினாலும், அதற்கு முன்பே, 9ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன.
மராட்டிய மன்னர் சிவாஜியின் சகோதரர் வெங்கோஜி 17ம் நுாற்றாண்டில், கோவிலை புனரமைப்பு செய்ததுடன், பிரதான கோபுரத்தையும் கட்டினார். கடந்த 20ம் நுாற்றாண்டில் சிவனை வழிபடும் லிங்காயத் சமூகத்தினரால் கோவில் மேலும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது கர்நாடகாவில் வசிக்கும் லிங்காயத் சமூகத்தினரின் முக்கிய யாத்திரை தலங்களில் இந்த கோவிலும் ஒன்று.
அரக்கன்
புராணக் கதைகளின்படி காலாசுரன் என்ற சக்திவாய்ந்த அரக்கனை, அகத்திய முனிவர் தோற்கடித்தார். இமயமலையில் உள்ள குகைக்கு அரக்கனை துரத்தி விட்டார். நான் மீண்டும் வந்து நகரத்தை நாசமாக்குவேன் என்று காலாசுரன் சபதம் எடுத்து உள்ளார். அதன்படி மீண்டும் திரும்பி வந்து, தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களிடம் சென்று தன்னை வணங்காவிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
அந்த நேரத்தில் சிவபெருமான் காலபைரவ அவதாரம் எடுத்து ஒரே அடியால் காலாசுரனை கொன்றுள்ளார். இதையடுத்து அங்கு காலபைரேஸ்வர் கோவில் கட்டி சிவபெருமானுக்கு அர்ப்பணித்தனர் என்றும் வரலாறுகள் கூறுகின்றன. கோவிலில் உள்ள காலபைரேஸ்வரர் சிலையை வழிபட்டால், தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தீமைகள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். விஷ்ணு, துர்கா உள்ளிட்ட ஹிந்து தெய்வங்களின் சிலைகளும் கோவிலில் உள்ளது.
முக்கிய விழாக்கள்
கோவிலின் நடை தினமும் காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் திறந்து இருக்கும். மஹா சிவராத்திரி, காலபைரவர் ஜெயந்தி, நவராத்திரி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாக உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கலாசார உடை அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.