பதிவு செய்த நாள்
08
ஜூலை
2025
11:07
கர்நாடகாவின் வட மாவட்டமான பெலகாவி, வெயில் மாவட்டமாக கருதப்படும். இங்கு கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. ரேணுகா எல்லம்மா உட்பட பல்வேறு கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு மிக்கவை. இவற்றில் மஹாலட்சுமி கோவிலும் ஒன்றாகும். பெலகாவியின் சுளேபாவி கிராமத்தில் மஹாலட்சுமி கோவில் உள்ளது. இது மிகவும் அற்புதமானது. இத்தகைய கோவிலை பார்ப்பது அபூர்வம். இதனை, ‘அபூர்வ நாணயங்களின் கோவில்’ என அழைக்கின்றனர். இங்கு குடிகொண்டுள்ள மஹாலட்சுமியை தரிசிக்க, நாட்டின் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
பொதுவாக பக்தர்கள், தங்களின் விருப்பம் நிறைவேறினால் பணம், தங்கம், வெள்ளி உட்பட, விலை மதிப்பான பொருட்களை காணிக்கை செலுத்துவது வழக்கம். ஆனால் பெலகாவி மஹாலட்சுமி கோவிலில், நாணயங்களை காணிக்கை செலுத்துகின்றனர். நாட்டில் பல்வேறு கோவில்களின் உட்புறம் தங்கம் அல்லது வெள்ளி முலாம் பூசப்பட்ட தகடுகளால் ஜொலிப்பதை பார்த்திருப்போம். மஹாலட்சுமி கோவில் முழுதும், நாணயங்களை அடித்து வைத்திருப்பதை காணலாம்.
இக்கோவிலை, ‘நாணயங்களின் கோவில்’ என்றே அழைக்கின்றனர்; 500 ஆண்டுகள் பழமையானது. இங்கு குடி கொண்டுள்ள மஹாலட்சுமி ஜாக்ருத தேவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். மஹாலட்சுமியை தரிசித்தால், வீட்டில் வறுமை ஒழிந்து செல்வம் பெருகும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்பது ஐதீகம். இதனால் மஹாராஷ்டிரா, கோவா உட்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
மஹாலட்சுமி முன் நின்று, தங்களின் கஷ்டங்களை கூறுகின்றனர். இவைகள் சரியானால் குறிப்பிட்ட எண்ணிக்கையில், நாணயங்கள் அடிப்பதாக பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் கோவிலுக்கு வந்து நாணயங்களை ஆணியில் அடித்து, நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். பல நுாற்றாண்டுகளாக இந்த நடைமுறையை பின்பற்றுகின்றனர். கோவில் முழுதும் நாணயங்களாக தென்படுவதால் நாணயங்கள் அடிப்பதற்கு, கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளதால், கோவிலில் வைத்துள்ள காணிக்கை பெட்டியில் போடுகின்றனர்.
மூலஸ்தான கதவு, 20க்கும் மேற்பட்ட கம்பங்கள் என, அனைத்து இடங்களிலும் நாணயங்களை காணலாம். விக்டோரியா ராணி உருவப்படம் கொண்ட நாணயம், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன், அதற்கு பின்னரும் புழக்கத்தில் இருந்த ஒரு ரூபாய், 50 பைசா, 25 பைசா, 10 பைசாக்கள் மட்டுமின்றி வெள்ளி நாணயங்களும் அடிக்கப்பட்டுள்ளன.
கோவில் 500 ஆண்டுகளுக்கு முன், யாரால் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை. ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. 1940ல் மல்லிகார்ஜுன கோரிஷெட்டி என்ற பக்தர், தனக்கு குழந்தை வரம் வேண்டும் என, பிரார்த்தனை செய்தார்.அதன்படி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் அவர், மஹாலட்சுமி கோவிலை புதிதாக கட்டி, வேண்டுதலை நிறைவேற்றினார். கோவில் நிர்வாகத்தினர் படிப்படியாக கோவிலை மேம்படுத்தினர்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, கோவிலில் திருவிழா நடக்கிறது. ஒன்பது நாட்கள் நடக்கும் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். கோவிலில் தினமும் அதிகாலை சூரிய கதிர்கள், மஹாலட்சுமி விக்ரகம் மீது படிகின்றன. மாலையானதும் மஹாலட்சுமியின் பாதங்களை சூரிய கதிர் ஸ்பரிசிக்கிறது. இத்தகைய அபூர்வமான காட்சிகளை காண்பது அரிது.
வாரந்தோறும் வெவ்வாய், வெள்ளிக்கிழமைகள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இந்த நாட்களில் பெண்கள் குங்கும அர்ச்சனை செய்கின்றனர். இதனால் குடும்பம் செழிப்பாகும் என்பது ஐதீகம்.