மாதம் ஒரு முறை தரிசனம் தரும் உருகாதேஸ்வரி
பதிவு செய்த நாள்
08
ஜூலை 2025 11:07
கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கோவில்களும், தனித்தன்மை கொண்டது. வழிபாடுகளும் மாறுபட்டவை. இத்தகைய கோவில்களில் சாம்ராஜ்நகரில் உள்ள உருகாதேஸ்வரி கோவிலும் ஒன்றாகும். சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் உம்மத்துார் கிராமத்தில் உருகாதேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இது அம்பாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். மாதம் ஒரு நாள் மட்டுமே தரிசனம் அளிக்கும் கோவிலாகும். வரலாற்று சிறப்பு மிக்கது. இதற்கு முன் கிராமத்தினரே கோவிலை நிர்வகித்து வந்தனர். அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு முறை கிராமத்தினர் சேர்ந்து, திருவிழா நடத்திய போது, ஏதோ காரணத்தால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது; அடித்து கொண்டனர். அதன்பின் இக்கோவிலை அரசு, ஹிந்து அறநிலையத்துறையில் சேர்த்தது. அன்று முதல் மாதம் ஒரு முறை, போலீஸ் பாதுகாப்பில் கோவில் திறக்கப்படும். கிராமத்தினர் பூஜைக்கு அனுமதி அளிக்கப்படும். ஆண்டுதோறும் ஜனவரியில், திருவிழா நடத்தப்படும். இதில் சாம்ராஜ்நகர் மட்டுமின்றி, மைசூரு, பெங்களூரு, தமிழகம் உட்பட, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர். திருவிழா முடிந்த பின், சில நாட்கள் வரை இரவு நேரத்தில் கோவில் அருகே செல்ல அனுமதி இல்லை. இதற்கு புராணத்தில் ஒரு கதை சொல்லப்பட்டுள்ளது. உருகாதேஸ்வரி தேவியின், எட்டு அக்கா, தங்கைகள் இரவு நேரத்தில் கோவிலுக்கு வந்து, தங்கள் ஊர் மக்களின் கஷ்ட, சுகங்கள் பற்றி பேசியபடி அமர்ந்திருப்பர். அப்போது இவர்களை யாரும் பார்க்க கூடாது என்பது ஐதீகம். இதேபோன்று ஒரு நாள், திருவிழா முடிந்த பின் அக்கா, தங்கைகள் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது திருவிழாவில் தங்கள் பொருட்களை மறந்து விட்ட பாட்டியும், பேரனும் அவற்றை எடுப்பதற்காக, மீண்டும் கோவில் அருகில் வந்தனர். தேவியர்களை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இதை கவனித்த தேவியர்கள், ‘நீங்கள் திரும்பி பார்க்காமல் செல்லுங்கள்’ என கூறினர். ஆனால் பாட்டியும், பேரனும் திரும்பி பார்த்ததால், இருவரும் கல்லாக மாறினராம். எனவே அன்று முதல், திருவிழா முடிந்த சில நாட்கள் வரை, கிராமத்தினர் கோவில் பக்கமே செல்வதில்லை. இந்த கட்டுப்பாடு பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படுகிறது. கோவிலுக்கு வந்து உருகாதேஸ்வரியை தரிசித்தால், மன அமைதி, நிம்மதி கிடைக்கும். வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் விலகும். தொழில் வெற்றி அடையும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. இதே காரணத்தால், மாதந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, அம்பாளை தரிசித்து செல்கின்றனர்.
|