மண்ணில் கிடைத்த 8 அடி உயர சிவன் சிலை
பதிவு செய்த நாள்
15
ஜூலை 2025 02:07
கர்நாடகா ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற மாநிலம். மன்னர்கள், முனிவர்கள், பொதுமக்களால் கட்டப்பட்ட ஏராளமான பழங்கால கோவில்கள் உள்ளன. கோவில்களின் கட்டட கலை, சிற்பங்கள் இன்றளவும் கம்பீரமாகவும், பக்தர்களை கவர்ந்து இழுக்கும் வகையிலும் உள்ளன. கர்நாடகாவில் அதுவும் பெங்களூரு பகுதியில் பேய்களால் கட்டப்பட்ட, சிவன் கோவில் உள்ளது. பேய்கள் என்றாலே தீயசக்தி; தீயசக்திகளால் கோவில் கட்ட முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை. பெங்களூரு ரூரல் தேவனஹள்ளியில் இருந்து 8 கி.மீ., துாரத்தில் உள்ளது பொம்மாவரா கிராமம். இந்த கிராமத்தில் 600 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட, சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலில், மூலஸ்தானத்தில் எட்டு அடி உயர சிவன் சிலை உள்ளது. கடந்த 600 ஆண்டுகளுக்கு முன்பு பொம்மாவரா கிராமத்தை, பேய்கள் ஆட்டி படைத்தன. மாலை 6:00 மணிக்கு மேல் வீட்டைவிட்டு வெளியே வரும், மக்களை பயமுறுத்தியும் வந்தன. பேய்களால், கிராம மக்கள் பல துன்பங்களை அனுபவித்தனர். பேய்கள் அடித்து பலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனை பார்த்த கிராமவாசியான, தீவிர சிவன் பக்தர் புச்சையா என்பவர், பேய்களை விரட்ட கிராம மக்கள் உதவியுடன், சிவன் கோவிலை கட்டினார். இதனால் கோபம் அடைந்த பேய்கள், கோவிலை அழித்தன. பேய்களை அடக்கியே தீருவேன் என்று சபதம் எடுத்த புச்சையா, மாந்தீரிகம் கற்று மந்திரவாதி ஆனார். தனது சக்தியை பயன்படுத்தி பேய்களை பிடித்து, மந்திர கட்டு போட்டு உள்ளார். அலறிய பேய்கள் தங்களை விடுவிக்கும்படி கதறி உள்ளன. இடித்த கோவிலை மீண்டும் கட்ட வேண்டும்; கிராமத்தை விட்டு நிரந்தரமாக செல்ல வேண்டும் என்று, பேய்களுக்கு இரண்டு நிபந்தனைகள் போட்டு உள்ளார் புச்சையா. இதற்கு சம்மதித்த பேய்களும், ஒரே இரவில் மீண்டும் கோவிலை கட்டிவிட்டு, கிராமத்தை விட்டு வெளியேறின. கோவில் கட்டி 550 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், கோவிலுக்குள் எந்த சாமி சிலையும் இல்லாமல் இருந்து உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், ஆழ்துளை கிணறுக்கு பள்ளம் தோண்டிய போது, எட்டு அடி உயரத்தில் ஒரு சிவன் சிலை கிடைத்தது. அந்த சிலையை எடுத்து வந்து, கோவிலின் மூலஸ்தானத்தில் வைத்து பக்தர்கள் வழிபட ஆரம்பித்தனர். சிவலிங்கம் அழகான தோற்றத்துடன் இருந்ததால், கோவிலுக்கும் சுந்தரேஸ்வரர் என்ற பெயரும் கிடைத்தது. மற்ற கோவில்களில் உள்ள துாண்களில் சாமி சிற்பங்கள் இருக்கும். ஆனால் இந்த கோவில் துாண்களில் மட்டும் பேய்களின் சிற்பம் இருக்கும். பேய்கள் கட்டியதால், சிற்பம் இப்படி இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த கோவிலின் நடை தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்து இருக்கும்.
|