பதிவு செய்த நாள்
15
ஜூலை
2025
02:07
கடவுள் இல்லாத இடமே இல்லை. ஒவ்வொரு பொருளிலும், கடவுள் இருப்பதாக நம்பப்படுகிறது. கடவுளை நம்பிக்கையுடன் வழிபட்டால், கேட்ட வரங்களை வழங்குவார்; பல அதிசயங்களை நிகழ்த்துவார்.
பூங்கா நகர் பெங்களூரில் அழகான பூங்காக்கள், அரண்மனை, கோட்டை மட்டுமல்ல, பிரசித்தி பெற்ற கோவில்களுக்கும் பஞ்சமே இல்லை. ஒவ்வொரு வீதியிலும் கோவில்கள் உள்ளன. தனித்தனி சிறப்புகள் கொண்டு, பக்தர்களை ஈர்க்கின்றன.
பெங்களூரின் கிரிநகரில் காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு குடிகொண்டுள்ள வாயு புத்ரன் ஆஞ்சநேயர் வரங்களை வாரி வழங்குவதில் வள்ளல். இவரது அற்புதங்கள் பல.
வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவிக்கும் மக்கள், வேலை தேடுவோர், திருமண தடை உள்ளவர்கள், குழந்தையில்லாதோர் என, பலரும் இங்கு வந்து பிரார்த்தனை செய்து பயன் அடைகின்றனர்.
இதுபோன்ற அதிசய சக்தி வாய்ந்த கோவில், பெங்களூரின் கிரிநகரில் உள்ளது. நாட்டின் பெரிய, பெரிய விஞ்ஞானிகளும் கூட, காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து, வேண்டுதல் வைத்து சென்றுள்ளனர். கோவிலுக்குள் சென்றால் ஆயிரக்கணக்கான தேங்காய்கள் கட்டியிருப்பதை காணலாம். மது பழக்கத்தை போக்கும் சக்தி ஆஞ்சநேயருக்கு உள்ளது.
கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலை, நமஸ்காரம் செய்வதை போன்ற வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. இது, ஒரே கல்லால் செய்யப்பட்ட அற்புதமான சிலையாகும். இதனை 18 சிற்பிகள் செதுக்கினர். இதற்கான காலம் பத்து மாதங்கள்.
கோவில் வளாகத்தில் உள்ள ஒரு கவுன்டரில் இருந்து, நாருடன் கூடிய தேங்காய் வாங்க வேண்டும். தேங்காய் மீது எண், பெயர், தேதி எழுதி பக்தர்களுக்கு வழங்குவர். இந்த தேங்காயுடன் ஆஞ்சநேயரின் முன் சென்று, பிரார்த்தனை செய்து அவர்களின் கையால் கட்ட வேண்டும். தேங்காய் கட்டிய பின், கோவிலை சுற்றி வர வேண்டும்.
அதன்பின் நான்கு நாட்கள், தினம் 41 முறை வீதம் ஆஞ்சநேயரை வலம் வர வேண்டும். 16 நாட்களானதும், தேங்காயை அவிழ்த்து அதில் இனிப்பு தயாரித்து, பக்தர்களுக்கு கொடுத்தால் பிரார்த்தனை முழுமையாகும். நினைத்த காரியம் கைகூடும். வாழ்க்கையில் அனைத்தும் சுகமாகும். ஆஞ்சநேயருக்கு தினமும் பூஜை, அபிஷேகம், மாலையில் மங்களாரத்தி செய்யப்படுகிறது. 12 நாட்கள் ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் டிசம்பரில் கோவிலில் திருவிழா நடக்கிறது. இதில் 35,000 முதல் 40,000 பக்தர்கள் பங்கேற்பர்.