பதிவு செய்த நாள்
15
ஜூலை
2025
03:07
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதமாகும். லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார். சுபிட்சங்களை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சிகளை சாதகமாக்குவார். அரசியல்வாதிகளின் நிலையை உயர்த்துவார். தலைமையின் ஆதரவும் சிலருக்கு புதிய பொறுப்பும் பதவியும் கிடைக்க வைப்பார். பலவழிகளிலும் பணம் வர ஆரம்பிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். மனதில் உற்சாகம் உண்டாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். முதலீட்டிற்கு ஏற்ற லாபம் இல்லையே என்ற நிலை மாறும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக தள்ளிப் போன குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் நிலை அறிந்து அவர்களுக்கு உதவியும் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் ஜூலை 26 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும் பொன், பொருள் சேர்க்கை இருக்கும். விவசாயிகள் இம்மாதம் கவனமாக செயல்படுவது நல்லது.
பணியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தேவைக்கேற்ற வருமானம் வரும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 18, 19. ஆக. 14, 15
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 23, 28. ஆக. 1, 5, 10
பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட நன்மை உண்டாகும்.
அஸ்தம்: தெளிவான சிந்தனையுடன் திட்டமிட்டு செயல்படும் உங்களுக்கு ஆடி மாதம் யோகமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் சூரியன், சத்துரு ஜெய ஸ்தானத்தில் ராகு, ராசிநாதன் புதனின் சஞ்சார நிலை, அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரனின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகள் நினைத்தபடி இந்த மாதத்தில் நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசு வழியில் நீண்ட நாளாக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயம் தரும். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு 2, 4, 6 ம் இடங்களைப் பார்ப்பதால் குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரம், தொழிலில் எதிர்ப்பு, போட்டி இல்லா நிலை உருவாகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். மாதம் முழுதும் ராசிநாதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஷேர் மார்க்கட்டில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சிலர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். நீண்ட நாளாக தள்ளிப் போன கோயில் வழிபாட்டை குடும்பத்துடன் மேற்கொள்வீர்கள். தானம் தர்மம் என்று செய்யும் அளவிற்கு உங்கள் மனம் இளகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உடல் பாதிப்பு விலகி உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். தொழிலில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 19, 20. ஆக. 15, 16.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 23, 29. ஆக. 2, 5, 11, 14.
பரிகாரம்: மீனாட்சி அம்மனை தரிசிக்க வேண்டுதல் நிறைவேறும்.
சித்திரை 1, 2 ம் பாதம்: எந்த ஒன்றிலும் வேகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ரத்தக்காரகனான செவ்வாய் ஜூலை 30 வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல வகையிலும் செலவு ஏற்படும். கையிருப்பு கரையும். அலைச்சல் அதிகரிக்கும். முன்பின் தெரியாதவர்களை நம்பி சில வேலைகளில் ஈடுபட்டு நஷ்டமடைய வேண்டிய நிலை உருவாகும். ஜூலை 30 முதல் ஜென்ம ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். அதே நேரத்தில் குழப்பமும் அதிகரிக்கும். எதை முன்னால் செய்வது? எதைப் பின்னால் செய்வது என்ற முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர்கள். அதன் காரணமாக சில வாய்ப்புகள் நழுவிப் போகும் என்றாலும், லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். நெருக்கடி வந்தாலும் சமாளித்து முன்னேற்றமடைவீர்கள். செலவிற்கேற்ற வருமானம் வரும். 6ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதுடன் குருபார்வையும் அங்கு உண்டாவதால் உடல் பாதிப்பு விலகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட போட்டி, நெருக்கடி இல்லாமல் போகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். ராசிநாதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய இடம், வீடு வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலை அமையும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகி எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். ஜூலை 26 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். உதவி கேட்டவர்களுக்கு அவர்களின் நிலை அறிந்து உதவி செய்வீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற வார்த்தையின்படி விவசாயத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம்: ஜூலை 20. ஆக. 16.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 23, 27. ஆக. 5, 9, 14.
பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட சங்கடங்கள் விலகும்.