பதிவு செய்த நாள்
15
ஜூலை
2025
03:07
மகம்: மனதில் எண்ணியதை உடனே நடத்த வேண்டும் என்ற வேகம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்பார்கள். இந்த மாதத்தில் சிம்ம ராசியினரும் போராட்டத்திற்கு மேல் போராட்டத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஜென்ம ராசிக்குள் மோட்சக் காரகன் கேதுவும் ஜூலை 30 வரை செவ்வாயும் சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பம் ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைத்தது போல் உங்களுக்கு தேவையான காலத்தில் உதவிகள் தேடி வரும். தொழிலிலும் வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். குருவின் பார்வை 3, 5, 7 ம் இடங்களுக்கு உண்டாவதால் எத்தகைய பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி உண்டாகும். சகோதரர்கள் வழியில் ஆதரவு கிடைப்பதுடன் உங்கள் முயற்சிக்கும் அவர்கள் உதவியாக இருப்பர். தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலக ஆரம்பிக்கும். ஜூலை 25 முதல் ஆக. 8க்குள் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். பணியில் இருந்த நெருக்கடி விலகும். ஜூலை 30 முதல் தன குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. வார்த்தைகளில் கவனமாக இருப்பதும், வரவு செலவில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை தேவை. விவசாயிகள் முயற்சிகளை மேற்கொள்ளும்முன் சூழல் அறிந்து செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஆக. 12, 13.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 25, 28. ஆக. 1, 7, 10, 16.
பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடங்கள் நீங்கும்.
பூரம்: அதிர்ஷ்டக்காரகனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் முயற்சியால் வெற்றி அடைய வேண்டிய மாதம். ஜூலை 27 வரை சுக்கிரன் 10ம் இடத்தில் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். சேமிப்பு கரையும். தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதற்காக கையில் இருப்பதை அடகு வைத்தும் பணம் தேடுவீர்கள். வரவேண்டிய பணமும் இழுபறியாகும் என்றாலும் அதன் பிறகு நிலைமை சீராகும். வருவாய் அதிகரிக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சிலர் நீண்டநாளாக தள்ளிப்போன குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். மாதம் முழுவதும் கேது சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் மனதில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு ரத்த சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு உங்களை பயமுறுத்தும். எந்தவிதமான குழப்பங்களுக்கும், பயத்திற்கும் இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. திசா புத்தி சாதகமாக இருந்துவிட்டால் எத்தகைய பாதிப்பும் உங்களை நெருங்காமல் போகும். லாப ஸ்தானத்தில் குரு சாதகமாக சஞ்சரிப்பதால் தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். நண்பரால் ஆதாயம் கூடும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும் என்றாலும், ஜூலை 30 முதல் தன குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் உருவாகும். வரவு செலவிலும் நெருக்கடி ஏற்படும். வருமானம் வந்தாலும் ஏதேனும் ஒரு வகையில் செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். குடும்பத்தினரும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போகும் நிலை சிலருக்கு ஏற்படும். இந்த மாதத்தில் ஒப்பந்தங்கள், பத்திரங்களில் கையெழுத்திடும் நிலை வந்தால் கையெழுத்திடும் முன் கவனமாக படித்துப் பார்க்க வேண்டும். தனியாரிடம் கடன் வாங்குபவர்கள் விழிப்புடன் இருப்பது நன்மையை உண்டாக்கும். இக்காலம் எதிர்மறையான காலம் என்பதுடன், ராசிநாதனும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஜூலை. 17. ஆக. 13, 14.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 24, 28. ஆக. 1, 6, 10, 15.
பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட நன்மை உண்டாகும்.
உத்திரம் 1 ம் பாதம்: எந்த நிலையிலும் தன் சுய கவுரவத்தை விட்டுக் கொடுக்காத உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் போராடி வெற்றி பெற வேண்டிய மாதம். விரய ஸ்தானமான 12ம் இடத்தில் ராசிநாதன் சஞ்சரிப்பதால் பல வகையிலும் செலவு ஏற்படும். செலவிற்கேற்ற வருமானம் வராமல் போகும். அதற்காக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்படும். வியாபாரிகள் கணக்கு வழக்கை இந்த நேரத்தில் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வழக்கு, அபராதம் கட்ட வேண்டிய நிலை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் எதிர்மறையான மாதமாக இருக்கும். தலைமையிடமும் தொண்டர்களிடமும் அதிருப்தியை சந்திக்க வேண்டியிருக்கும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேதுவும் குழப்பத்திற்கு மேல் குழப்பத்தை ஏற்படுத்துவார். தடுமாற்றங்களை அதிகரிப்பார். பிறரைப் பற்றி புரிந்து கொள்ள வைப்பார். நீங்கள் யாரை நம்பினீர்களோ அவர்கள் கூட இந்த நேரத்தில் உங்களுக்கு உதவ யோசிப்பார்கள். மாதத் தொடக்கத்தில் புதன் வக்கிரமாக இருந்தாலும், ஜூலை 25 முதல் ஆக. 3 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நன்மைகள் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மங்களகாரகன் குருவும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பிரச்னை வந்தாலும் அதை உங்களால் சமாளிக்க முடியும். பணியில் இருந்த பிரச்னைகளை அதிகாரியின் துணையுடன் முடிவிற்கு கொண்டு வருவீர்கள். உங்கள் வேலைகளுக்கும் முயற்சிக்கும் வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் பெறும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 18. ஆக. 14
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 28. ஆக. 1, 10
பரிகாரம்: காலையில் சூரியனை வழிபட சங்கடங்கள் விலகும்.