மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா கோலாகலம்
பதிவு செய்த நாள்
29
ஜூலை 2025 10:07
கோவை; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. பக்தி பரவசத்துடன் குண்டத்தில் இறங்கிய பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 32ம் ஆண்டு ஆடிக் குண்டம் விழா, கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று மாலை, பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட்டது. 30 அடி நீளம், 3 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. இன்று அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து, பொதுப்பணித்துறை சார்பில் அம்மன் சுவாமி அழைப்பும், அதைத் தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற்றது. இதில் பக்தி ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் திருவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு நான்கு இடங்களில் அன்னதானம் வழங்க, தற்காலிக கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த, நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. நான்கு இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு துறையினர் பவானி ஆற்றிலும், குண்டம் அருகேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால் ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு, 20 சவர் குளியல் அமைக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்க,15 வனப்பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். கோவிலுக்கு வருவதற்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
|