வத்திராயிருப்பு; சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதால் பக்தர்கள் மீண்டும் கோயிலுக்கு மலையேற அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஜூலை 24 ஆடி அமாவாசை நாளான்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இருந்து வருசநாடு மலை பாதைக்கு செல்லும் மலைப்பாதையில் காட்டுத் தீ ஏற்பட்டது. அதனை வனத்துறையினர் அணைத்த போதிலும் மீண்டும் நேற்று முன்தினம் அதிகாலை முதல் காட்டு தீ பற்றி எரிய துவங்கியது. காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் தீயை அணைக்க வனத்துறையினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இருந்த போதிலும் நேற்று மாலை தீயை முழு அளவில் அணைத்தனர். இருந்த போதிலும் மலைப்பகுதியில் தீயின் புகைமூட்டம் காணப்பட்டதால் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை 6:00 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலை 10:00 மணி வரை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறினர். பின்னர் வனத்துறை கேட் மூடப்பட்டது. மலைப்பகுதியை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.