பதிவு செய்த நாள்
15
ஆக
2025
03:08
அன்னை அருள்புரியும் திருத்தலங்கள் இப்பாரத பூமியில் பல உண்டு. அதில் முக்கியமாக 51 சக்தி பீடங்கள் என்று போற்றப்படுகிற திருத்தலங்கள் தாயின் ஒவ்வொரு உடற்கூறுகள் விழுந்தது என்று போற்றப்படுவதாகும்.
அவ்வாறு 51 பாகத்தின் உடற்கூறுகளும் ஒன்றிணைந்த சக்தியாக 51 அடி உயரத்தால் ஆன தனக்கென்று தான் அமர்ந்து உறைந்து நின்ற சுயம்புவாக விஸ்வரூபமாக திருஉருவமாக தன்னுடைய சக்தியின் மொத்த சொரூபமாக விளங்கும் அடியவராம் ஸ்ரீ முத்து சுவாமிகளுக்கு நிதர்சனத்தில் அருட்காட்சி அளித்து, அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாய் அமர்ந்த திருத்தலம் திருவடிசூலம் எனும் முழுமுதற் ஸ்தலமாகும்.
இவள் புதியவளா, பழமையவளா என்று என்னும் அன்பர்களுக்கு அறிய விடையாய் இங்கு அருள்புரிகிறாள். ஆதியில் தேவர்களுக்கு கொடுத்த திருவாக்கின்படி யுகங்கள் தோன்றுவதற்கு முன் தம் திருவடி பதித்து திரிசூலம் ஊன்றிய திருத்தலத்தில் மீண்டும் திரிசக்தி சொரூபமாக, மும்மூர்த்திகளும் தனக்குள் ஒடுக்கமாக்கி, தன் அடியவர் தேவி குக யோகியை நிமித்தமாக்கி, கலியுகத்தின் நாயகியாய் ஆதி முதல் ஓம்காரி ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழிலையும் தமதாக்கி, தன் சிவனாரின் செங்கோலை கையில் கொண்டு, 10 கரங்கள் கொண்டு இப்பாருலகை காக்க வந்த பராசக்தியாய் விண்ணிற்கும், மண்ணிற்குமாக விஸ்வரூப தரிசனம் தந்து அதன் தத்துவமாய் அடி அடியவரை வழி நடத்தி, அப்பிரமாண்ட ரூபமாகவே திருவுருவாகி அமர்ந்த திருத்தலம் திருவடிசூலம்.
அதுமட்டுமா... எம்முடை முழு முதற் திருவிடம் இதுவே என்பதை உறுதிப்படுத்த விஸ்வரூப தேவிக்கு அஸ்திவாரம் எடுக்கையில் 16 அடி ஆழத்தில் ரத்தம் பீறிட்டு கொப்பளிக்க, மூன்று சொர்ண ரேகை கொண்ட சுயம்புவாய் வெளிப்பட்டாள் பக்த கோடிகளுக்கு முன்பாகவே!
இத்தாயின் திருக்கோவிலின் சிறப்புகள்
சகல கோடி தேவர்களும் தன் திருவடியின் கீழ் அமர்ந்து, ஒரே கல்லால் ஆன 18 அடி சூலம்.
நீண்ட நாள் நம்மை பீடிக்கப்பட்ட நாக தோஷங்கள் அகல, அஷ்ட நாகங்களால் ஆன திவ்ய சொரூப நாக தேவதை இவ்வுலகில் எங்கும் காண இயலாத தோற்றத்தில் அமர்ந்துள்ளாள்.
இங்கு ஞாயிறு மாலை ராகு காலத்தில் பூஜை செய்து தோஷங்களை நீங்க பெற்றவர்கள் பலர். மூன்று சொர்ண ரேகையுடன் கூடிய சுயம்பு.
தங்களை தொடர்ந்து வரும் பிரச்னைகள், கடன் தொல்லைகள், மன கஷ்டங்கள் நீங்கி எல்லா செல்வமும் பெற குறிப்பாக வீடு, திருமணம், குழந்தை பேறுகளுக்காக அன்னைக்கு ஒவ்வொரு வாரம் ஞாயிறு அன்று காலை 10:30 முதல் 11:30 மணி வரை தங்கள் திருக்கரங்களால் பால் அபிேஷகம் செய்து, ஆயிரம் ஆயிரம் பலன் பெற்றவர்களில் தாங்களும் ஒருவராகலாம்.
51 அடி பிரமாண்ட ஆதிசக்தியை கண்டால்... பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் நீங்கள் கேட்ட வரங்கள் ஒன்று ஒன்றாக அன்னை அளவில்லாது செல்வங்களை வாரி வழங்குவாள் பிரமாண்ட நாயகி கலியுக தெய்வம் ஸ்ரீதேவி கருமாரி.
செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில் இருந்து திருப்போரூர் – செங்கல்பட்டு சாலையில் 17 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.
தினமும் திருவான்மியூரில் இருந்து நேரடி பேருந்து சேவையும் வெள்ளி, ஞாயிறுகளில் செங்கல்பட்டில் இருந்து சிறப்பு பேருந்தும் உள்ளது.