திருப்பரங்குன்றம்; மதுரை விளாச்சேரியில் விநாயகர் சதுர்த்திக்காக களிமண்ணால் ஆன மெஹா சைஸ் விநாயகர் சிலைகள் தயாராகின்றன. இங்கு சீசனுக்கு ஏற்றார் போல் சுவாமி சிலைகள், நவராத்திரி கொலு பொம்மைகள், கிறிஸ்மஸ் குடில்கள் தயாரிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்காக 2 இஞ்ச் முதல் 10 அடி உயரத்தில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி களிமண்ணால் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுடன் இந்தாண்டு ஆதி அந்த விநாயகர், கருட வாகன விநாயகர் உள்பட பல்வேறு வடிவங்களில் தயாராகிறது. இச்சிலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற உள்ள விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்க அனுப்பப்படுகின்றன.
சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விஜயகுமார் கூறியதாவது: எங்கள் மூதாதையர் கிராம திருவிழாக்களுக்காக களி மண்ணில் ‘புரவிகள்’ (குதிரைகள்) தயாரித்தனர். எனது தந்தையுடன் நானும் குடும்பத்துடன் இப்பணியில் ஈடுபட்டுள்ளேன். இரண்டு அடி உயரம் வரை களிமண், ஆற்று மணல் மூலம் சிலைகள் தயாரிக்க முடியும். அதற்கும் உயரமான சிலைகள் தயாரிக்க இவற்றுடன் யானை சாணமும் சேர்க்க வேண்டும். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை முகாம் சென்றுள்ளதால், அழகர் கோயில் சென்று யானைச் சாணம் வாங்கி வருகிறோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், மாசுகட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரிலும் களிமண்ணால் மட்டுமே சிலைகள் தயாரித்து, வாட்டர் பெயின்ட் அடிக்கிறோம். கடந்தாண்டு இதுபோன்ற பெரிய விநாயகர் சிலைகள் 25 தயாரித்தோம். இந்தாண்டு 15 தயாரிக்கிறோம். ஒரு சிலை தயாரிக்க வெயில் நன்றாக இருந்தால் 18 முதல் 25 நாட்கள் ஆகும். மழை துாறினால் பணிகள் பாதிக்கும். சில நாட்களாக சாரல் விழுந்ததால் களிமண் காய்வதற்காக மின்விசிறி பயன்படுத்துகிறோம், என்றார்.