விசுவநாதர் கோவில் புனரமைக்கப்படுமா? பெண்ணாட்டத்தில் பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2025 12:08
பெண்ணாடம், திருமலை அகரத்தில் நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த விசாலாட்சி அம்மன் உடனுறை விசுவநாதர் கோவில் உள்ளது. கோவில் கருவறையில் சிவன், விஷ்ணு இருவரும் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இதனால் இவ்வூருக்கு திருமலை அகரம் (விஷ்ணு – திருமால், சிவன் – அகரம்) என பெயர் வந்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர். கோவிலில் விநாயகர், முருகன், காலபைரவர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் உள்ளன. விசாலாட்சி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. அவர் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் பிரதோஷம், சிவராத்திரி வழிபாடுகள் சிறப்பாக நடக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் பராமரிப்பின்றி, பாழடைந்துள்ளதால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, அரச மரம் வளர்ந்து, சுற்றிலும் முட்புதர்கள் மண்டியுள்ளன. கோபுர சிலைகளும் உடைந்துள்ளன. இங்கு தற்போது ஒருகால பூஜை மட்டுமே நடக்கிறது. கோவிலை புனரமைக்கக்கோரி கிராம மக்கள் பலமுறை முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை. எனவே, இனியாவது விசுவநாதர் கோவில் முற்றிலும் சிதிலடையும் முன் புனரமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.