தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவில், தென்னக திருப்பதி என போற்றப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் நின்ற கோலத்தில், ஒரே தாயாரான பூமி தேவியுடன் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கிறார். நான்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இங்கு மூலவர் பெருமாளுக்கு எப்போதும் உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது. திருமலை திருப்பதியைப் போலவே, ஒப்பிலியப்பன் கோவிலில் தான் புரட்டாசி பிரமோற்சவம் நடைபெறும். இத்தகைய பெருமைக்குரிய கோவிலில், இவ்வாண்டும் புரட்டாசி பிரமோற்சவ 10 விழாவுக்காக இன்று காலை, உற்சவர் பெருமாளான பொன்னப்பர் பூமிதேவி தாயாருடன் கொடிமரம் முன்பாக எழுந்தருள, மங்கல வாத்தியங்கள் முழங்க, கொடி மரத்திற்கு பட்டாச்சாரியார்கள் சிறப்புப் பூஜைகள் செய்து கருடாழ்வார் வரைந்த கொடியினை ஹஸ்த நட்சத்திரம், கன்னியா லக்னத்தில் ஏற்றி வைத்தனர். இவ்விழாவினை முன்னிட்டு வரும் 27ம் தேதி வெள்ளி கருட வாகனத்தில் பெருமாளும், வெள்ளி ஹம்ச வாகனத்தில் தாயாரும் திருவீதி உலா நடைபெறுகிறது.