பழநி; பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிக பக்தர்களின் கூட்டம் இருந்தது.
பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு வருகை புரிந்தனர். கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப் கார்,வின்சில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம், பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டது. பாத விநாயகர் பின்புறம் படிப்பாதையின் முகப்பு அமைந்துள்ளது. வடக்கு கிரி வீதியில் குடமுழுக்கு மண்டப வாயில் வழியாக கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நாட்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் படிப்பாதை வழியாக மேலே செல்ல வரும் வெளி மாநில பக்தர்கள், தமிழ் படிக்க இயலாத பக்தர்கள் அங்குள்ள நபர்களிடம் கேட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே கோயில் நிர்வாகம் பாத விநாயகர் கோயில் அருகே வின்ச்,ரோப் கார், குடமுழுக்கு மண்டப பாதை ஆகியவற்றுடன் கிரி வீதியின் அமைப்பை படமாக வழிகாட்டி அமைத்தால், வெளி மாநில, தமிழ் படிக்க இயலாத பக்தர்கள் எளிதாக செல்லும் இடத்தை அறிந்து கொள்வர்.