சபரிமலை; பக்தர்களின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் சபரிமலை வரும் பாதைகளில் ஆக்சிஜன் பார்லர்களுடன் கூடிய அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பம்பையில் இருந்து சன்னிதானம் இடையே 5 கி.மீ. தொலைவில் மூன்று கிலோமீட்டர் செங்குத்தான ஏற்றத்தில் பக்தர்கள் ஏற வேண்டும். இவ்வாறு ஏறும் போது பக்தர்களுக்கு மாரடைப்பு போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. இவர்களுக்கு உதவுவதற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள பாதைகளில் ஆக்சிஜன் பார்லர்களுடன் கூடிய 12 அவசர உதவி சிகிச்சை மையம் தொடங்கப் பட்டுள்ளது. பக்தர்கள் திரும்பி செல்லுகின்ற சுவாமி ஐயப்பன் ரோட்டில் மூன்று இடங்களில் அவசர உதவி சிகிச்சை மையங்கள் உள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் கரிமலை செல்லும் வழியில் கோயிக்காவு, மம்பாடி, அழுதைக்கடவு ஆகிய இடங்களில் ஆக்ஸிஜன் பாலர்களுடன் கூடிய அவசர உதவி சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.எருமேலி - கரிமலை - பம்பை பாதையில் ஐந்து இடங்களில் இது அமைந்துள்ளது. சன்னிதானத்தில் முன்புறமும் இந்த சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெறும் பக்தர்கள் தேவைப்பட்டால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் பத்தனந்திட்டா, கோட்டயம் போன்ற மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது பெரிதும் உதவியாக உள்ளதாக பாதிக்கப்படும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.