சங்கடங்களை தீர்க்கும் வழித்துணை ஸ்ரீஜெய ஆஞ்சநேயர்
பதிவு செய்த நாள்
19
டிச 2025 12:12
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கடமலைப்புத்துார் பகுதியில் ஸ்ரீ ஜெய ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. பால பீமா சேவா டிரஸ்ட் - சென்னை நிர்வாகத்திற்கு உட்பட்டு, கடமலைப் புத்துாரில் கடந்த, 1990ம் ஆண்டு, காஞ்சி பெரியவர் ஆசியுடன், முக்கியஸ்தர்களால் நிர்மானிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுவரை மூன்று முறை கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. மார்கழி மாதம், மூல நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் செய்வதால் கிரக தோஷங்கள் நீங்கும். ஜெய கணபதி, ஜெய ஆஞ்சநேயர் கோவிலில் இருப்பது தனிச்சிறப்பு. கோவிலின் அமைவிடம் சென்னையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில், கடமலைப்புத்துார் பகுதியில் அமைந்துள்ளது. மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம் பகுதியில் இருந்து பஸ் போக்குவரத்து வசதி உள்ளது. கோவிலின் எதிரே மிகப்பெரிய ஆஞ்சநேயர் சூரிய பகவானை வணங்கியவாறு கிழக்கு நோக்கி உள்ளது. அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், உபன்யாசம் செய்பவர்கள் மற்றும் ஏழை, பணக்காரர்கள் பாகுபாடின்றி, ஏராளமானோர் தரிசித்துள்ளனர். திருமண தடை நீங்க சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து, பூஜை செய்து வழிபட்டு வந்தால், திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது வடை மாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை மற்றும் வேண்டுதல் நிறைவேற காகிதத்தில் எழுதி மாலை செலுத்துவதால் நினைப்பது நடப்பதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 108 வடை மாலை சனிக்கிழமை அபிஷேகத்திற்கு சாத்தப்படுகிறது. ஆஞ்சநேயருக்கு செந்துாரம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அனுமன் ஜெயந்தியன்று மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. சனிக்கிழமை தோறும், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப திருமண நாள், பிறந்தநாள், விசேஷ நாட்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. கோவில் நடைதிறப்பு காலை : 07:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரையிலும். பால பீமா சேவா டிரஸ்ட், அண்ணாமலை காலனி, விருகம்பாக்கம், சென்னை - நிர்வாகத்திற்கு உட்பட்டு ஸ்ரீ ஜெயகணபதி, ஸ்ரீ ஜெய ஆஞ்சநேயர் கோவில், கடமலைப்புத்துாரில் உள்ளது. தொடர்புக்கு: ஆலய நிர்வாகி கி. சத்தியமூர்த்தி. செல் எண் : 7358727503 மருத்துவர். ரம்யா பாலாஜி. செல் : 9444225779.
|