செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய மைலை ஊராட்சியில், பழமை வாய்ந்த ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கடைசியாக இந்த கோவிலில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, 2024 ஜூலை 3 ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர், பாலமுருகன், ஸ்ரீ பால் முனீஸ்வரர், அய்யப்பன் ஆகிய சுவாமிகளின் சன்னதிகளும் உள்ளன. சுற்றுவட்டார பகுதி மக்கள் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் நடைபெறும் வழிபாட்டில் பங்கேற்று செல்கின்றனர். இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு இந்த சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய்த்துாள், பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு மகாதீபாராதனை நடைபெறும். இக்கோவில் திருப்போரூர் பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ., தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 15 கி.மீ., தொலைவிலும், கூடுவாஞ்சேரியிலிருந்து 18 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது.