திருப்போரூர் அடுத்த செங்காடு அருகே யோக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில், மிகவும் விசேஷமானது, இங்கு மலையேறாமல், தரையிலேயே யோக ஆஞ்சநேயர் மற்றும் யோக நரசிம்மர் இருவரையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.
இது சோளிங்கர் தலத்தின் அம்சத்தைப் போன்றது. இங்கு ஆஞ்சநேயர் நான்கு கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி, ஜெபமாலை மற்றும் முத்திரையுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு, ராமர், சீதை, லக்ஷ்மி, நரசிம்மர், ஹயக்ரீவர், தன்வந்திரி, சக்கரத்தாழ்வார் சன்னதிகளும் உள்ளன. கோவில் விமானத்தின் தோற்றம் வடமாநிலத்தில் இருப்பதுபோன்று அழகிய பாங்குடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வழிபட்டால் மன நோய்கள் மற்றும் தீய சக்திகளால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும் என நம்பப்படுகிறது. ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி, ஆங்கில புத்தாண்டு, பொங்கல், ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பங்குனி உத்சவம் போன்ற பண்டிகை விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. ஒவ்வொறு சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டில், திருப்போரூர் மற்றும் சுற்றியுள்ள பக்தர்கள் வடமாலை, துளசி மாலை, மலர் மாலை சார்த்தி வழிபாடு செய்கின்றனர். இக்கோவிலுக்கு வரும் செங்காடு வனத்துறை சாலை சீரமைக்கப்பட்டு புதிய சாலை அமைத்ததால் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. இன்று ஹனுமன் ஜெயந்தியை ஒட்டி, சிறப்பு திருமஞ்சனம், அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது.