ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், நடத்தப்படும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி பள்ளி அரங்கில் நடந்தது. இதில் ‘அருளாளர் அவ்வையார்’ என்ற தலைப்பில் புதுகை பாரதி பேசியதாவது: சங்க புலவர்களில் மிகவும் தனித்துவமானர் அவ்வையார். அவர் எழுதிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், விநாயகர் அகவல் என, அனைத்தும் சிறப்பானவை. அவ்வையின், வெண்பாக்களும், குறட்பாக்களும் மக்களை நல்வழிப்படும் பொருள் நிறைந்த பாடல்கள். அறம் செய்ய விரும்பு, ஊக்கமது கைவிடேல், தெய்வம் இகழேல் பேன்ற வரிகள் வாழ்க்கையை நெறிப்படுத்தும் சொற்களாகும். அவ்வையின் நுால்களில் ‘விநாயகர் அகவல்’ மிகவும் முத்தாய்ப்பான நுால். தமிழகம் ஞான பூமியாகவும், யோக பூமியாகவும் விளக்குகிறது. அதானல்தான் இங்கு ஞானிகள் அவதரித்தனர். ஆண்டாள் நாட்சியார், 12 வயது குழந்தை, அவளது பாசுரங்களில் எத்தனையே வேத ஞானம் மறைந்துள்ளன. இவை எல்லாம், ஏதோ கற்பனையில் தோன்றியவை அல்ல, கருவிலே திருவுடையவர்களுக்கு மட்டுமல்ல, திருவே கருவில் வந்த ஆண்டாள் போன்றவர்களுக்கு மட்டுமே சாத்தியம். அவ்வை எழுதிய விநாயகர் அகவல் ஞானத்தின் சுரங்கம். அவ்வளவு சிறப்பானது. இந்த உலகம் எதை அடிப்டையாக கொண்டு படைக்கப்பட்டதோ, அதன் ஒட்டு மொத்த வடிவம்தான் விநாயகர் என்று நம் யோக சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உணர்த்தவே ஓங்கார ரூபமாக விநாயகர் அவதரித்தார். இவ்வாறு, அவர் பேசினார்.