அகிம்சை, உயிர் கொல்லாமை உணர்த்துவது ஹிந்து தர்மம் சொற்பொழிவாளர் ரெங்கன் ஜி பேச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2026 11:02
மதுரை: ‘‘அகிம்சை, உயிர் கொல்லாமையை உணர்த்துவது ஹிந்து மதத்தின் அடிப்படை பண்பு’’ என மதுரையில் நடந்த ‘தமிழர்களின் தாய்மதம்’ எனும் நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொழிவாளர் ரெங்கன் ஜி பேசினார்.
மதுரை ஆண்டாள்புரம் வசுதாரா வளாகத்தில் சொற்பொழிவில், ‘சைவமும், வைணவமும்’ என்ற தலைப்பில் நேற்று அவர் பேசியதாவது:
ராமனை விட ராவணன் உயர்ந்தவன் என்கிறார்கள். வேதங்கள் பயின்றதால் தான் ராவணன் உயர்ந்தவன் என்பதை, வேதங்களை எதிர்ப்பவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ராமபிரான் புலால் சாப்பிட்டார் என சர்ச்சையை கிளப்புகிறார்கள். சுந்தர காண்டத்தில் ராமபிரான் மாமிசம் சாப்பிட மாட்டார் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ராமாயணத்தில் ஒரு இடத்தில் மட்டுமே ராமபிரான் புலால் உண்டார் என்று வருகிறது; ஆனால் நுாறு இடங்களில், சாஸ்திரங்கள் விதித்த உணவுகளை மட்டுமே சாப்பிடுவார் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
சத்ரியர்களுக்குபல கல்யாணம் செய்துகொள்ளும் வழக்கம் உண்டு. ஆனால் ராமர் சத்ரியர் என்றாலும் அதற்கு விதிவிலக்கு என்பது உலகறியும். எனவே ராமர் சத்ரியர் என்பதால் புலால் உண்ணுவார் என்ற தவறான வாதத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது.எந்த பண்பாட்டை எதிர்க்கிறாயோ, அதிலிருந்து தான் விழுமியங்களை தேடுகிறாய் என்பது ராமாயணம் கற்றுத்தரும் பாடம்.
அகிம்சை, உயிர் கொல்லாமையை உணர்த்துவது ஹிந்து மதத்தின் அடிப்படை பண்பு. திருவள்ளுவர் புலால் உண்ணாமையை ஆதரிப்பதால், அவரை சமணர் என்று கூறி விட முடியாது. சமணம் தோன்றுவதற்கு முன்பேஹிந்து மதம் புலால் உண்ணாமையை பேசியிருக்கிறது.விஷ்ணு புராணத்தில் கடவுளை எந்த சொல்லாலும், குறிப்பிட முடியாது என்றாலும், பகவான் என்றே அழைக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு பேசினார்.