பதிவு செய்த நாள்
07
ஏப்
2026
10:04
மைசூரு மாவட்டம் பல்வேறு சிறப்புகளை கொண்டது; இங்கு வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளம். இவற்றில் மனதை கொள்ளை கொள்ளும் மனோன்மணீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும்.
மைசூரு மாவட்டத்தின் மைசூரு – ஊட்டி தேசிய நெடுஞ்சாலை அருகில், மன்டகள்ளி கிராமத்தில் மனோன்மணீஸ்வரர் கோவில் உள்ளது. இது, 400 ஆண்டுகள் பழமையானது. ஜெயசாமராஜேந்திர உடையார் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அழகான இக்கோவில் நாளடைவில் சீர் குலைந்தது. கோவிலை பராமரித்து பாதுகாக்க, மாநில அரசும், ஹிந்து அறநிலையத்துறையும் அக்கறை காட்டவில்லை.
இதுகுறித்து, கிராமத்தினரும், விவசாயிகளும் மன்றாடியும் பலன் இல்லை. அதனால், வெறுப்படைந்த கிராமத்தினரும், சுற்றுப்புற விவசாயிகளும் ஒன்று சேர்ந்து, தங்களின் சொந்த பணத்தை செலவிட்டு, கோவிலை மேம்படுத்தினர். மனோன்மனேஸ்வரர் கோவிலில், பிரமாண்டமாக கும்பாபிஷேகமும் நடத்தினர்.
கோவிலின் மூலஸ்தானத்தில், மனோன்மணீஸ்வரரும், மனோன்மணீஸ்வரியும் அருள் பாலிக்கின்றனர். கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஹோமங்கள் நடக்கின்றன. சுற்றுப்புற கிராமத்தினர் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இங்கு வந்து தரிசனம் செய்தால், குடும்பத்தில் பிரச்னை அகலும் என்பது ஐதீகம். குறிப்பாக தம்பதியர் இடையே மனகசப்பை போக்கி, ஒற்றுமையை ஏற்படுத்தும் சக்தி கிடைக்கும். அதனால், பக்தர்கள் தேடி வருகின்றனர்; வேண்டுதல் வைக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின், கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். மைசூருக்கு இக்கோவில் மேலும் பெருமை சேர்க்கிறது.
மைசூரில் இருந்து 10 கி.மீ.,
பெங்களூரில் இருந்து, 142 கி.மீ., ராம்நகரில் இருந்து 94 கி.மீ., மாண்டியாவில் இருந்து, 44 கி.மீ., தொலைவில் மைசூரு உள்ளது. மைசூரு நகரில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் மன்டகள்ளி கிராமம் உள்ளது. இங்கு தான் மனோன்மணீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும் மைசூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயில்களும் அதிக எண்ணிக்கையில் இயங்குகின்றன. விமானத்தில் வருவோர், மன்டகள்ளி விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வாடகை வாகனத்தில் கோவிலுக்கு செல்லலாம்.
தரிசன நேரம்: காலை, 6:00 முதல் மதியம் 12:00 மணி வரை; மாலை, 5:00 முதல் இரவு 9:00 மணி வரை.
அருகில் உள்ள கோவில்கள்: சாமுண்டீஸ்வரி கோவில், நந்தி கோவில், மஹாபலேஸ்வரா கோவில், ஜ்வாலாமுகி திரிபுர சுந்தரி கோவில், கோட்டே ஆஞ்சநேயர் கோவில்.