பதிவு செய்த நாள்
10
ஏப்
2026
12:04
விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரித்து மனதில் குழப்பம், செயல்களில் பின்னடைவை ஏற்படுத்தும். அஷ்டம சனி தொழிலில் நெருக்கடி, வேலையில் பிரச்னை, உடல்நிலையில் பாதிப்பை தரும். என்றாலும் உங்கள் ராசியாதிபதி பாக்ய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் உங்கள் திறமை வெளிப்படும். செல்வாக்கு அதிகரிக்கும். , போராட்டமான நிலை விலகும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதிய நம்பிக்கை பிறக்கும். உங்கள் பாக்யாதிபதி செவ்வாய் மே 10 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் விவசாயிகள் யோசித்து செயல்படுவது நன்மையளிக்கும். புதிய இடம், வீடு வாங்கும்போது சட்ட சிக்கல்கள் இருக்கிறதா என்பதைத்தெரிந்து வாங்குவது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் முடிந்தவரை குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். வார்த்தைகளிலும், பண விவகாரங்களிலும் எச்சரிக்கை அவசியம். மாணவர்களுக்கு உயர்கல்வி விருப்பம் நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: ஏப். 15, 16. மே 12, 13.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 19, 25, 28. மே 1, 7, 10.
பரிகாரம் : தில்லை காளியை வழிபட வாழ்வில். நன்மை உண்டாகும்.
எங்கும் எதிலும் தனித்துவத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் ஏப். 20 வரை உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரன் சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும், பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் பூர்வ புண்ணியாதிபதி குருபகவான் யாமிருக்க பயமேன் என்று உங்களைப் பாதுகாப்பார். செல்வாக்கை உயர்த்துவார். பெரிய மனிதர்கள் வரிசையில் உங்களையும் நிறுத்துவார். தைரியமாகவும் தன்னம்பிக்கையாகவும் செயல்பட வைப்பார். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை தீரும். கூட்டுத்தொழில் ஆதாயம் தரும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஏழாம் இடத்திற்கு குருப்பார்வை கிடைப்பதால் திருமண வயதினருக்கு வரன் வரும் என்றாலும், புத்திக்காரகன் ஏப். 23 வரை நீச்சமாக சஞ்சரிப்பதால் நிதானமாகவும், திட்டமிட்டும் செயல்படுவது நல்லது. அஷ்டம ஸ்தானத்தில் உங்கள் ரோகாதிபதி சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனமாக இருப்பது நன்மையை உண்டாக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் பொறுப்புடன், அதிகார வரம்பை மீறாமல் செயல்படுவதும் அவசியம். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்வி கனவு பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: ஏப். 16. மே 13, 14.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 19, 24, 28. மே 1, 6, 10.
பரிகாரம்: மாசாணி அம்மனை வழிபட நன்மைகள் நடக்கும். நினைத்த வேலைகள் நடந்தேறும்.
சிந்தித்து செயலாற்றும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் தைரியமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிநாதன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வருமானம் வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுகூலங்கள் உண்டாகும். உங்கள் அஷ்டமாதிபதியும், பூர்வ புண்ணியாதிபதியுமான குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ‘பணம் பந்தியிலே; குணம் குப்பையிலே’ என்பதற்கேற்ப பணவரவால் தைரியம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். எத்தனை நெருக்கடிகள் இந்த நேரத்தில் வந்தாலும் அதை உங்களால் சமாளிக்க முடியும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். ஜீவனாதிபதி புதன் மாதத்தொடக்கத்தில் நீச்சமாக சஞ்சரித்தாலும், இறுதியில் சாதகமாக சஞ்சரிப்பதால் வரவேண்டிய பணம் வரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கலைஞர்களின் நிலை உயரும். தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும். வயதானவர்கள் உடல்நிலையில் கூடுதல் செலுத்துவது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும், வியாபாரிகள் கொள்முதலுக்காக பணம் எடுத்துச்செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நன்மையாகும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்வது நன்மையாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: ஏப். 17. மே 14.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 19, 28. மே 1, 10.
பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடங்கள் விலகும்.