ஐப்பசி ராசி பலன்: சிம்மம்.. நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு இது கவனமாக செயல்பட வேண்டியது அவசியம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2026 03:10
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் மாதமாகும். ஜென்ம ராசிக்குள் கேதுவும் சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரித்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்கள் வாழ்க்கையில் சோதனைகளை உண்டாக்கி வந்தனர். என்றாலும் அனைத்தையும் சமாளித்து வந்தீர்கள். இந்த நிலையில் நவ. 13 முதல் ஜென்ம கேது விரய ஸ்தானத்திற்கும், சப்தம ராகு சத்துரு ஜெய ஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாவதால் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடிகள் போராட்டங்கள் பிரச்னைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். ஆறாம் இட ராகு அரியணையில் ஏற்றுவார் என்ற வார்த்தைக்கு ஏற்ப உங்கள் செல்வாக்கு உயரும். செய்துவரும் வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். அக். 20 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்கு கிடைப்பதால், குழப்பங்கள் விலகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நண்பர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் அமையும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பம் விலகும். பிள்ளைகள், கணவர் நலனில் அக்கறை அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். மாணவர்கள் சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும்.
சந்திராஷ்டமம்: அக். 23, 24.
அதிர்ஷ்ட நாள்: அக். 19, 25, 28. நவ. 1, 7, 10, 16.
பரிகாரம்: தாணுமாலயனை வழிபட மனதில் நிம்மதி உண்டாகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும்.
பூரம்: எந்த இடத்தில் பிறந்திருந்தாலும் முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிநாதன் சகாய ஸ்தானத்தில் நீச்சமடைந்திருக்க, சகாய ஸ்தானாதிபதி வக்கிரம் பெற்றிருப்பதால் செயல்களில் நிதானம் வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதை நீங்களே எடுத்து செய்வது நன்மையளிக்கும். அக். 20 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு உங்கள் நிலையை உயர்த்துவார். உழைப்பு, லாபம், பெருமை என்ற நோக்கோடு செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். பிள்ளைகள் வழியில் பெருமை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இணக்கும் ஏற்படும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும் கையில் பணம் புரளும், இழந்த செல்வாக்கு மீண்டும் கிடைக்கும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் வக்கிரம் பெற்றிருக்கும் சனி பகவான் அவ்வப்போது உங்கள் நிலையில் சங்கடத்தை ஏற்படுத்துவார். உடலிலோ அல்லது பொருளாதார நிலையிலோ, மற்றவர்களால் நெருக்கடிககளையோ நீங்கள் காண வேண்டியதாக இருக்கும் என்பதால், எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதில் நிதானம் அவசியம். மாதத்தின் பிற்பகுதியில் ராகு கேது பெயர்ச்சியாவதால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். நண்பர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். உங்கள் மனம் தெளிவடையும். சூனியம் வைத்ததுபோல் பாதிக்கப்பட்டிருந்த உங்கள் நிலையில் திருப்பம் ஏற்படும். மற்றவர்கள் வியக்கத்தக்க வகையில் உங்கள் வளர்ச்சி இருக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். சங்கடத்தில் இருந்த அரசியல்வாதிகள் நிலையில் மாற்றம் உண்டாகும். எதிரிகளை வெல்லக்கூடிய சக்தி ஏற்படும். பெண்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் தேடிவரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் கவனம் தேவைப்படும். மாணவர்களுக்கு தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அவற்றுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் படிப்பில் அக்கறை கொள்வது நன்மையளிக்கும்.
சந்திராஷ்டமம்: அக். 24, 25.
அதிர்ஷ்ட நாள்: அக். 19, 28. நவ. 1, 6, 10, 15.
பரிகாரம்: ஆதி திருவரங்கனை வழிபட வேண்டுதல் பலிக்கும். நன்மைகள் நடக்கும்.
உத்திரம் 1 ம் பாதம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தைரியமாக செயல்பட்டு வந்த உங்களுக்குள் ஒரு அச்சம் ஏற்படும். எந்தவொரு வேலையிலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்படும். உங்களுக்கும் உங்களுக்குரியவர்களுக்கும் கம்யூனிகேஷன் கேப் உண்டாகும். அதனால் உடனடியாக முடிய வேண்டிய வேலைகளும் இழுபறியாகும் என்பதால், திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். அரசுவழி முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. அக். 20 முதல் உங்கள் பூர்வ புண்ணியாதிபதி குரு பகவான் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் வேலையின் காரணமாக சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். குடும்பம் ஓரிடம் தான் ஓரிடம் என்று வசிக்கும் நிலை உண்டாகும் என்றாலும், உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். பெரியோருடைய ஆதரவு கிடைக்கும் சிலருக்கு புதிய சொத்துசேரும். நீண்ட நாட்களாக விற்க நினைத்த சொத்துகளை இந்த நேரத்தில் விற்க முடியும். மாதத்தின் கடைசியில் ஜென்ம ராசியை விட்டு கேது நகர்வதால் உங்களுக்கேற்பட்ட சோதனைகள் பிரச்னைகள் குழப்பங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். புதியவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். மூத்த குடிமக்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். ஷேர் மார்க்கெட் விவகாரங்களில் ஈடுபடுபவர்கள் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது அவசியம். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. விவசாயிகள் மாதம் முழுவதும் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் கடைசியில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: அக். 25.
அதிர்ஷ்ட நாள்: அக். 19, 28. நவ.1, 10.
பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட்டுவர உங்கள் செல்வாக்கு உயரும். சங்கடங்கள் விலகும்.
பகிர்கcopied
மேலும்
ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »