பதிவு செய்த நாள்
31
ஜூலை
2026
11:07
ஆண்டாண்டு காலமாக, 5 கிராம மக்கள் கொண்டாடி வரும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பெரியாண்டிபாளையத்தில், ஊரின் நடு நாயகமாக அமைந்துள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இக்கோவிலை, பெரியாண்டிபாளையம், சின்னிய கவுண்டன்புதுார், சின்னாண்டிபாளையம், குளத்துப்புதுார், குள்ளே கவுண்டன்புதுார் கிராம மக்களும், சுற்றுப்பகுதி மக்களும் வழிபட்டு வருகின்றனர்.
பழமையான கோவிலை புனரமைத்து, திருப்பணி செய்து கடந்த, 2015ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. 16 தூண்கள் தாங்கி நிற்கும் அன்னையின் எழில் மிகு திருக்கோவிலை, அக்னி தேவன், இந்திரன், ஈசானன், எமதர்மன், வருண பகவான், வாயு பகவான், குபேரன்... என அஷ்ட திக் பாலகர்கள் சூட்சம உருவமாய் உறைந்து அருள்பாலிக்கின்றனர்.
நீரூற்று விநாயகர்
கோவிலின் தென் மேற்கில், கன்னிமூல கணபதி அருள் பொங்க வீற்றிருக்கிறார். கோவிலின் தென் புறம் பழமையான அரச மரத்தின் கீழ், 200 ஆண்டுகள் பழமையான, நீரூற்று விநாயகர் நித்தமும் அருள் பாலித்து கொண்டிருக்கிறார்.
சுற்றுப்பகுதிகளில் வேறு எங்கும் இல்லாத வகையில், அன்னை மாரியம்மன்,கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோவிலில், நின்ற காலத்தில், கருணை பொங்கும் விழிகளுடன் அருள் பாலிக்கிறாள். அன்னையின் கருவறையை சுற்றிலும், மகேஸ்வரி, வைஷ்ணவி, துர்கா தேவியரும் பக்தர்களுக்கு அருளி அளிக்கின்றனர்.
கக்கு மலை ஆண்டவர்
விசாலமான கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், புனிதமான தீர்த்த கிணறு, உயரமான திருமதில் சுவர்களுடன் கோவில் அமைந்துள்ளது. கருவறையில், அருள் பொங்கும் விழிகளுடன் அன்னை மாரி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். முன்மண்டபத்தில், பாலகணபதியும் பாலமுருகனும் அன்னையின் இடது வலது என இருபுறமும் காட்சியளிக்கின்றனர். கோவிலுக்கு உட்பட்ட ஸ்ரீ கருப்பராயர், கன்னிமார் சன்னதி, கோவிலில் வடபுறம் அமைந்துள்ளது. கருப்பராயருடன், நோய்களைத் தீர்க்கும் வல்லமை கொண்ட, கக்கு மலை ஆண்டவரும் காட்சியளிக்கிறார்.
நவராத்திரி: ஆண்டுதோறும் நவராத்திரி விழா, 10 நாட்கள், கொலு அமைத்து மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. அத்துடன், அமாவாசை, பவுர்ணமி என மாதம் தோறும் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெறுகிறது. பவுர்ணமி நாளில், சிறப்பு அலங்காரத்துடன், மாரியம்மன் உற்சவர் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள் அன்னை.
ஆடிப்பூரம்; மாரியம்மனுக்கு ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மஹா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் விமரிசையாக நடந்து வருகிறது. ஐந்து கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் இங்கு வந்து பொங்கல் வைத்து அன்னைக்கு படைத்து வழிபடுகின்றனர். மாரியம்மனை நேர்த்தியாக விரதம் இருந்து வேண்டினால், நினைத்தது நடக்கும்.-கேட்டது கிடைக்கும், என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
சித்திரைக்கனி: சித்திரை கனி தமிழக முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து அன்னைக்கு மகா அபிஷேகம் செய்து கனி வகைகளை படைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
ஆறுமுக காவடி: நுாறாண்டுகளுக்கு மேலாக ஆண்டிபாளையம் காவடி குழுவினர் மாரியம்மன் சிறப்பு பூஜைகள் செய்து காவடி பூஜையும் செய்து பழிநிக்கு பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபட்டு வந்து, அன்னை மாரியம்மனையும் வழிபடுவது தை மாதத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
பொங்கல் விழா: நாடிவரும் பக்தர்களுக்கு நல்வழி காட்டும் அன்னை மாரியம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பூச்சாட்டு பொங்கல் விழா மிகமிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வளர்பிறையில் 15 நாட்கள் பூச்சாற்றுடன் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது
காளியம்மனுக்கு அழைப்பு
சனிக்கிழமை கம்பம் நட்டு ஐந்து நாட்கள் பக்தர்கள் விரதம் இருந்து கொண்டாடுகின்றனர். அது மட்டுமல்லாது அணைப்பாளையம் ரோட்டில் ரோட்டில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து, மாரியம்மன் பூச்சாட்டு பொங்கலுக்கு, காளியம்மனை அழைத்து வருவதும், படைக்களம் எடுத்து அம்மனை அழைத்து வருவதும் ஆண்டாண்டு காலமாக தொடர்கிறது.
வரும் 2027ம் ஆண்டு, திருப்பணிகளை சிறப்பாக செய்து எல்லாம் வல்ல அம்பிகையாகிய அன்னை மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் பெருவிழா கொண்டாடவும் கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
மொய் எழுதும் வழக்கம்
ஆடிப்பூர நன்னாளில், கிராம மக்கள் அன்னைக்கு சீர்வரிசை உடன் வந்து ஆடிப்பூர விழாவில் வளையல் அலங்காரம் செய்து வழிபடுகின்றனர். ஆடிப்பூரத்தில் அன்னையை வழிபடும் பக்தர்கள், மாரியம்மனுக்கு மொய் எழுதுவதும் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு மெய் எழுதும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதும் பக்தர்களின் தொன்று தொட்டு இருந்து வரும் அசைக்க முடியாத நம்பிக்கை.