பதிவு செய்த நாள்
31
ஜூலை
2026
11:07
நமது பண்பாடு, நாகரிகத்தை எதிர்கால சந்ததிகளும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், நம் முன்னோர்கள் எத்தனையோ விஷயங்களை நமக்கு அறிவுறுத்திச் சென்றுள்ளனர். அதில், முக்கியமானது கோவில் வழிபாடுகள் அன்றாட வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
முன்னோர்கள் கட்டிச்சென்ற பழமையான பல கோவில்கள்தான் இன்றும் நமக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றன. அவ்வகையில், எத்தனையோ பழமையான கோவில்கள், இன்றும் கிராமங்களை கட்டிக் காத்து வருகின்றன. இவ்வாறு, பல்லடத்தை அடுத்த, பருவாய் கிராம மக்களுக்கு காவல் தெய்வமாய் விளங்கி வருகிறாள் பருவாய் மாரியம்மன்.
பருவாய் மாரியம்மன் கோவிலின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:
பருவாய் மாரியம்மன் கோவில், எத்தனை ஆண்டுகள் பழமையானது என்ற கல்வெட்டுகளோ, வரலாறுகளோ தற்போது இல்லை. ஆனால், எங்கள் முன்னோர்கள் கூறியவண்ணம், 175 ஆண்டுகளுக்கு முற்பட்டது. காரணம், இதற்கு முன் கோவில் கருவறை திருப்பணியின் போது, 1850ம் ஆண்டின் காசுகள், அதில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை வைத்து பார்க்கையில், மாரியம்மன் கோவில், 1850ம் ஆண்டுக்கு முன்னரே உருவாகி இருக்கலாம் என்று கருதுகிறோம்.
கோவிலில், மாரியம்மன், மாகாளியம்மன், தாந்தோணி அம்மன், சவுண்டம்மன் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீமாரியம்மன் மூலவராக அருள்பாலிக்கிறார். ஊருக்கு பொதுவாய் அமைந்துள்ள இக்கோவில், பூசன், பாண்டியன், சேரன், செல்லம் மற்றும் ஆதி ஆகிய சமுதாய மக்களுக்கு குலதெய்வமாகவும் உள்ளது.
ஆண்டுதோறும் மாசி மாதம் நடக்கும் பூச்சாட்டு பொங்கல் விழா, மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவுக்காக, 15 நாட்கள் கம்பம் நடப்படும். இங்குள்ள ஆதி விநாயகர் கோவிலில் இருந்து தான் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் துவங்கப்படும்.
பூச்சாட்டு, பொங்கல் வைத்தல், பூவோடு எடுத்தல், மஞ்சள் நீராடல் என, பூச்சாட்டு பொங்கல் விழா மிகவும் விமர்சையாக நடக்கும். ஒட்டுமொத்த ஊர் மக்களும் கூடி, விரதம் இருந்து, அம்மனை வேண்டி வழிபடுவது வழக்கம். இதுதவிர, ஆடி வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். ஆடி மாதம் நடக்கும் திருவிளக்கு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டு வருகின்றனர்.
ஊருக்கு காவல் தெய்வமாக விளங்கும் பருவாய் மாரியம்மன் வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணத்தடை நீங்கும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அவிநாசி அருகேயுள்ள கருவலுார் மற்றும் கோடங்கிபாளையம் மாரியம்மன், பருவாய் மாரியம்மனுக்கு சகோதரிகள் என்றும் எங்கள் முன்னோர்கள் கூறியுள்ளனர். யாருக்காவது அம்மை பாதிப்பு ஏற்படும்போது, பருவாய் மாரியம்மனை வேண்டி வழிபடுவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் மீது இங்கு தீர்த்தம் தெளிக்கப்படும்.
இருப்பினும், நோய் சரியாகவில்லை என்றால், அடுத்து, கருவலுார் மாரியம்மனை வேண்டி, அங்கு சென்று தீர்த்தம் தெளித்ததும் சரியாகிவிடும் என்று முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். இன்றளவும் பக்தர்கள் பின்பற்றி வருகின்றனர். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட பருவாய் மாரியம்மன், ஒட்டுமொத்த கிராமத்தை காவல் காத்து வருகிறாள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.