பதிவு செய்த நாள்
26
ஆக
2026
12:08
கோவை மாவட்டம், அன்னூர் தாலுகாவில், நெ. 1 வடவள்ளி கிராமத்தில், குமரன் குன்றில் மிகவும் பழமையான, கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. மலையின் உச்சியில் பண்டார கோலத்தில் தண்டாயுதபாணி (பழநி முருகர் போல் மொட்டையுடன்) சுவாமி கல் சிலை பழுதுபட்ட நிலையில் இருந்துள்ளது. சுற்றுப்பகுதி மக்கள் அந்த இடத்தை தூய்மை செய்து சிறு கோவில் அமைத்து வழிபாடு செய்து வந்தனர். 1954ம் ஆண்டில் திருமுருகன் பூண்டி சிற்பியை அணுகி, அவரின் ஆலோசனைப்படி வள்ளி, தெய்வானை சமேதராய் முருகன் பிரதிஷ்டை செய்து, கல்யாண சுப்பிரமணிய சுவாமி என்ற பெயருடன் ஆலயம் அமைக்கப்பட்டது. 1965ம் ஆண்டில் பொதுமக்களால் அடிவார விநாயகர் ஆலயம், நவகிரக ஆலயம், மேல் விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டன. கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி அருள் பாலித்து வருவது சிறப்பானதாகும். இதனால் இக்கோவிலில் திருமணங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன.
கல்யாண சுப்பிரமணி சுவாமி மீது சூரிய ஒளி
ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் தேதி அன்று, சூரிய உதயத்தில் சூரியன் ஒளி சுவாமியின் மீது விழும். அன்று சுவாமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். தைப்பூச நாளில் தேரோட்டம் நடைபெறும். கிருத்திகை, செவ்வாய்க்கிழமை தோறும் தொடர்ச்சியாக, கல்யாண சுப்பிரமணி சுவாமியை வழிபட்டால், திருமண தடை நீங்கும், சஷ்டி தோறும் வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிட்டும். செவ்வாய் தோறும் வழிபட்டால் செவ்வாய் தோஷ பரிகார நிவர்த்தி கிட்டும். கிரக நிலை சரி இல்லாதவர்கள் ஒரு மண்டலம் தங்கி இருந்து, சுவாமியை வழிபட்டால், சகல நன்மைகளும் அடைவார்கள். அனைத்து தோஷ நிவர்த்திகளும் சுவாமிக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால், எல்லா நன்மைகளும் பெறுவர். உடல் நலம், மனநலம், கல்வி, வேலை வாய்ப்பு, மனக்குறைகள் போன்றவற்றிற்கு, இங்கு வந்து பிரார்த்தனை செய்தால், பலன் பெறுவர். இக்கோவிலில் கிருத்திகை, அமாவாசை, சஷ்டி, வைகாசி விசாகம், சூரிய ஒளி வழிபாடு விழா, சூரசம்காரம் விழா, கார்த்திகை தீபம், தைப்பூச தேர்த்திருவிழா, மாதம் தோறும் பவுர்ணமி கிரிவலம், பிரதோஷ வழிபாடு, வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தி சிறப்பு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்திரி ஆகிய நாட்களில், சிறப்பு பூஜையும், திருவிழாவும் நடைபெறும்.
மக்களின் உள்ளங்களில் குடி கொண்டிருக்கும் முருக பெருமான்
திருமுருகாற்றுப்படை போற்றும் முருகப்பெருமான் தமிழ் கடவுள் ஆவார். மக்களின் உள்ளங்களில் குடி கொண்டிருக்கும், முருகப்பெருமான் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களிலும், மலைகளிலும் கோவில் கொண்டிருப்பதாக, நம் பழந்தமிழ் மக்கள் போற்றியுள்ளனர்.
கொங்கு நாட்டின் வடக்கே மேற்கு தொடர்ச்சி மலைகள் அரனாக அணிவகுக்கும் பகுதியில், குமரன் குன்று திருத்தலம் அமையப் பெற்றுள்ளது. குன்று தோராடும் குமரக் கடவுள் பற்பல திருக்கோவில் கொண்டு, கொங்கு நாட்டில் எழுந்தருளி இருப்பது நமது தவம். அவற்றில் அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக முன்னோர்களால், முருகப்பெருமான் திருமண கோலத்தோடு எழுந்தருளி இருப்பது, சிறப்புமிக்க திருத்தலமாக திகழ்வது குமரன் குன்று திருத்தலமாகும். ஓதிமலை, நீலமலை, குருந்த மலை, மருதமலை, பாலமலை போன்ற அருள் மலைகள் சூழ்ந்திருக்கும், மேற்கொங்கு எல்லையில் நடுநாயகமாக சிறு குன்றாக குமரன் குன்று நிலை பெற்றுள்ளது. வள்ளி, தெய்வானை உடனமர் கல்யாண சுப்பிரமணியர் என்ற நாமத்தோடு, முருகப்பெருமான் குன்றில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். இக்கோவிலில் தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வர சுவாமி, வீரபாகு, அருணகிரிநாதர், இடும்பன், கடம்பன், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
அருளாலும் புகழாலும் உயர்ந்த இந்த கோவிலில், தைத்திங்களில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதும், திருத்தேரில் மலையை சுற்றி பவனி வருவதும், முக்கிய விழாவாகும். சித்திரை மாதம் முதல் நாளில் அதிகாலையில் எழும் சூரியன் ஒளி, முருகப் பெருமானின் திருமேனியில் விழும். ஐப்பசி மாதம் சூரசம்காரம் விழாவும், கிருத்திகை நாளில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். இக்கோவிலில் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்று வருவதும், திருமண வரம் அருளும் திருத்தலமாக விளங்குகிறது.