பதிவு செய்த நாள்
11
மார்
2013
11:03
சேலம்:சேலம் மண்டலத்தில், முதல் முறையாக, அழகிரிநாதர் கோயில் சொத்து விவரங்கள் அடங்கிய பட்டியல், "பிளக்ஸ் போர்டு மூலமாக, பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38,481 கோயில்கள் உள்ளன. கோயில்களுக்கு சொந்தமாக, 4.23 லட்சம் ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலம் உள்ளது. 66,226 வீட்டுமனைகள், கடைகள், அலுவலகங்கள் உள்ளன.
அலட்சியம் :
கோயிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் மனைகளை, 1.34 லட்சம்பேர் அனுபவித்து வருகின்றனர். பலர், கோயிலுக்கு, வாடகை செலுத்தாமலும், குத்தகை தொகையை வழங்காமலும் அலட்சியமாக உள்ளனர்.மேலும், அரசியல் பின்புலத்துடன் பலர், கோயிலுக்கு சொந்தமான நிலங்களை, ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருகின்றனர். இதன் மூலம், இந்து சமய அறநிலையத்துறைக்கு, கோடி கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் மாதம், தமிழகம் முழுவதும் உள்ள அறநிலையத்துறை அலுவலகங்கள் மூலம், ஒரு சுற்றறிக்கை அனுப்பட்டது.அதில், ஒவ்வொரு கோயிலிலும் நடைபெறும் பூஜை முறை, அதன் கட்டளைதாரர், உபயதாரர், கோயிலுக்கு சொந்தமான சொத்துகள், காலிஇடங்கள், அதன் ஆக்கிரமிப்பாளர், தற்போதைய நிலை, வழக்கு விவரம், வாடகைதாரர் எனில், கடைசியாக, வாடகை செலுத்திய நாள் ஆகிய, விவரங்கள் கேட்கப்பட்டன.மேலும், கோயில் மூலமாக, நடைபெறும் தர்ம ஸ்தபானங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிலை மற்றும் முன்னேற்றம் உள்ளிட்ட, விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன. கோயிலில் இருந்து பெறப்பட்ட விவரங்களை, பிளக்ஸ் போர்டு மூலம், ஒவ்வொரு கோயிலிலும், பக்தர்களின் பார்வைக்கு தெரியும்படி வைக்க, இந்து சமய அறிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அறிவுறுத்தல்:
அதன்படி, சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட, சேலத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 32 கோயில்களும், நாமக்கல் மாவட்டத்தில், 17 கோயில்களும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஆறு கோயில்களும் உள்ளன.சேலம் மண்டல, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலக அறிவுறுத்தல்படி, சேலம் மண்டலத்தில், கோட்டை அழகிரிநாதர் கோயிலில், கோயிலுக்கு சொந்தமான சொத்துகள், வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகள், அன்னதான திட்டம், பூஜைகள், வகுப்புகள் உள்ளிட்ட, அனைத்து விவரங்களும், பக்தர்களின் பார்வையில் படும்படி வைக்கப்பட்டு உள்ளன.விரைவில், சேலம் மண்டலத்துக்குட்பட்ட, பிற கோயில்களிலும் சொத்து உள்ளிட்ட, விவரங்கள் அடங்கிய பட்டியல் வைக்கப்பட உள்ளது.
கல்வெட்டுகள் வைக்க ஏற்பாடு :
கோயிலுக்கு சொந்தமான நிலத்தை, பலர் ஆக்கிரமிப்பு செய்வதால், கோயில் நிலம் உள்ள பகுதிகளில், கல்வெட்டுகளை பதிக்க, இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால், கோட்டை அழகிரிநாதர் கோயிலில், கோயிலுக்கு சொந்தமான நிலம், கடை உள்ளிட்ட பகுதிகளில் பதிக்க, ஐந்துக்கும் மேற்பட்ட, கல்வெட்டுகள் தயார் நிலையில் உள்ளன.